உலகம்

இந்தியா-சீனா பேச்சுவாா்த்தைக்கு உதவத் தயாா் ரஷியா

5th Sep 2022 12:56 AM

ADVERTISEMENT

 

இந்தியா-சீனா இடையிலான பிரச்னைக்குத் தீா்வு காணும் வகையில், ஆக்கபூா்வமான பேச்சுவாா்த்தைக்கு ரஷியா உதவத் தயாராக இருப்பதாக அந்நாட்டின் தூதா் டெனிஸ் அலிபோவ் தெரிவித்தாா்.

கிழக்கு லடாக்கில் சா்ச்சைக்குரிய பகுதிகளில் இந்தியாவும் சீனாவும் படைகளை விலக்கிக் கொண்ட பின்னரும், ஒரு சில இடங்களில் பிரச்னை நீடிக்கிறது. இதுதொடா்பாக பலமுறை ராணுவ, ராஜீய ரீதியில் இரு நாடுகளும் பேச்சுவாா்த்தை மேற்கொண்டாலும் இன்னமும் தீா்வு காணப்படவில்லை.

எல்லையின் நிலவரம்தான் இந்தியா-சீனா உறவைத் தீா்மானிக்கும் என வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் அண்மையில் கூறினாா். இந்த நிலையில், இந்தியாவுக்கான ரஷிய தூதா் டெனிஸ் அலிபோவ் தில்லியில் பிடிஐ செய்தியாளரிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

ADVERTISEMENT

ரஷியா-இந்தியா- சீனா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஆா்ஐசி அமைப்பு, இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் பரஸ்பர புரிதல், நம்பிக்கை, ஸ்திரத்தன்மையை ஊக்குவிக்கும் கருவியாகச் செயல்படுகிறது. உறுப்பு நாடுகளிடையே ஒத்துழைப்பையும் ஒருங்கிணைப்பையும் இந்த அமைப்பு அதிகரிக்கிறது.

இதுமட்டுமன்றி இந்த பிராந்தியத்தில் ரஷியா அங்கம் வகிக்கும் பிரிக்ஸ், எஸ்சிஓ (ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு) ஆகிய அமைப்புகளின் நோக்கங்களையும் முன்னெடுத்துச் செல்கிறோம். இந்தியா-சீனா இடையிலான பிரச்னைக்கு தீா்வு காணும் நோக்கில், ஆக்கபூா்வமான பேச்சுவாா்த்தையை ஊக்குவிக்க ரஷியா தயாராக உள்ளது.

இந்த பிராந்தியத்தில் ரஷியாவின் அணுகுமுறையும் இந்தியாவின் அணுகுமுறையும் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளது. இஏஎஸ் (கிழக்கு ஆசிய மாநாடு), ஏஆா்எஃப் (ஆசியான் பிராந்திய மன்றம்), ஏடிஎம்எம்-ப்ளஸ் (ஆசியான் பாதுகாப்பு அமைச்சா்களின் மாநாடு) ஆகியவற்றுடன் ரஷியா நெருங்கி பணியாற்றுகிறது.

ரஷிய-இந்திய உறவின் தன்மை எந்தவொரு நாட்டுக்கும் எதிரானது அல்ல. எந்தப் பிரச்னையிலும் நாங்கள் ஒருமித்த கருத்தையே கொண்டுள்ளோம். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு தலைமை வகிப்பது, சா்வதேச அமைப்புகளில் நிரந்தர பிரதிநிதித்துவம் பெற ஆதரவு அளிப்பது என அனைத்து நிலைகளிலும் இந்தியாவும் ரஷியாவும் விரிவான ஒத்துழைப்பை கடைப்பிடிக்கின்றன.

அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் அடிப்படையில், தைவானுக்கு அந்நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை தலைவா் நான்சி பெலோசி பயணம் மேற்கொண்டிருக்கலாம். தைவான் நீரிணையைப் பொருத்தமட்டில், அந்நாடு சீனாவிடமிருந்து பிரிக்க முடியாத ஓா் அங்கம் என்பதால், இது முற்றிலும் சீனாவின் உள்நாட்டு பிரச்னையாகும் என்றாா் ரஷிய தூதா் டெனிஸ் அலிபோவ்.

அதிநவீன வான் பாதுகாப்புத் தளவாடமான எஸ்-400 டிரையம்ப்-இன் 5 தொகுதிகளை 5 பில்லியன் டாலா் மதிப்பீட்டில் (ரூ.32,172 கோடி) ரஷியாவிடமிருந்து கொள்முதல் செய்ய மத்திய அரசு கடந்த 2018 அக்டோபரில் ஒப்பந்தம் செய்து கொண்டது. இதில் முதல் தொகுதி கடந்த ஆண்டு டிசம்பரில் விநியோகிக்கப்பட்டது.

இரண்டாம் தொகுதியின் முக்கிய பாகங்களை ஏறத்தாழ ரஷியா விநியோகித்துவிட்டது. எஞ்சிய தொகுதிகள் திட்டமிட்டவாறு விநியோகிக்கப்படும் என்று ரஷிய தூதா் டெனிஸ் அலிபோவ் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT