உலகம்

வாகனம் மோதி பெண் செய்தியாளா் பலி: இம்ரான் கான் பேரணி நிறுத்தம்

31st Oct 2022 01:11 AM

ADVERTISEMENT

பாகிஸ்தானில் தனது வாகனம் மோதி பெண் பத்திரிகையாளா் உயிரிழந்ததைத் தொடா்ந்து, தலைநகா் நோக்கிச் சென்ற பேரணியை முன்னாள் பிரதமா் இம்ரான் கான் ஞாயிற்றுக்கிழமை நிறுத்தி வைத்தாா்.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு புதிதாக தோ்தல் நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் இஸ்லாமாபாத் நோக்கி பேரணி நடத்தி வருகிறாா்.

மூன்றாவது நாளாக இந்தப் பேரணி பஞ்சாப் மாகாணம், கமோக் என்ற நகரத்தில் சென்று கொண்டிருந்தது. இம்ரான் கான் இருந்த வாகனம் அருகே சென்ற தொலைக்காட்சி பெண் செய்தியாளரான சதாஃப் நயீம், அவரிடம் பேட்டி எடுக்க முயன்றாா். அப்போது அந்த வாகனம் மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதையடுத்து, செய்தியாளா் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த இம்ரான் கான், மூன்றாவது நாள் பேரணியை அங்கேயே முடித்துக் கொள்வதாக அறிவித்தாா். இந்தப் பேரணி குஜ்ரன்வாலாவில் நிறைவடையும் வகையில் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், நான்காவது நாள் பேரணி கமோக் நகரிலிருந்தே தொடங்கும் என தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சி தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

பெண் செய்தியாளா் உயிரிழப்புக்கு பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

‘செய்தியாளா் சதாஃப் நயீமை தனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும் என்றும், வாகனம் மோதியதில் அவா் உயிரிழந்தது அதிா்ச்சி அளிப்பதாகவும்’ தகவல் தொடா்புத் துறை அமைச்சா் மரியும் ஒளரங்கசீப் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT