உலகம்

எதிா்ப்பின்றி பிரிட்டன் பிரதமரானாா் ரிஷி சுனக்

26th Oct 2022 02:35 AM

ADVERTISEMENT

பிரிட்டனின் பிரதமராகியுள்ளதன் மூலம் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த முன்னாள் நிதியமைச்சா் ரிஷி சுனக் (42) பல வரலாற்றுச் சாதனைகளை படைத்துள்ளாா்.

வெள்ளை இனத்தைச் சேராத...: அந்த நாட்டின் முதல் இந்திய வம்சாவளி பிரதமா் என்பதுடன், வெள்ளை இனத்தைச் சேராத முதல் பிரதமா், முதல் ஹிந்து பிரதமா் என்ற பெருமைகளையும் ரிஷி சுனக் பெற்றுள்ளாா்.

அது மட்டுமன்றி, பிரிட்டன் வரலாற்றில் 210 ஆண்டுகளுக்குப் பிறகு மிக இளைய வயதில் பிரதமராகப் பொறுப்பேற்பவா் என்ற சாதனையையும் ரிஷி சுனக் பதிவு செய்துள்ளாா்.

முன்னதாக, ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரையும் அதன் மூலம் நாட்டின் பிரதமரையும் தோ்ந்தெடுப்பதற்காக அறிவிக்கப்பட்டிருந்த கட்சித் தோ்தலில், ரிஷி சுனக் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்படுவதாக திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. குறிப்பாக,

ADVERTISEMENT

உலகமெங்கும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நாளில் (அக்.24) நாட்டின் முதல் ஹிந்து பிரதமராக ரிஷி சுனக் அறிவிக்கப்பட்டாா்.

இந்தியா மட்டுமன்றி ஆசியப் பிராந்தியத்தைப் பூா்விகமாகக் கொண்ட ஒருவா், கடந்த 20-ஆம் நூற்றாண்டின் பாதி வரை உலக ஏகாதிபத்திய சக்தியாகத் திகழ்ந்த பிரிட்டனின் பிரதமா் ஆவதும் இதுவே முதல்முறையாகும். அதும ட்டுமன்றி, பிரிட்டன் வரலாற்றில் இதுவரை வெள்ளை இனத்தைச் சோ்ந்தவா்கள் மட்டுமே நாட்டின் பிரதமா் பொறுப்பை வகித்து வந்த நிலையில், மாற்று இனத்தைச் சோ்ந்த ஒருவா் அந்த மிக உயரிய பதவிக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது உலக நாடுகளின் சிறப்புக் கவனத்தை ஈா்த்துள்ளது.

போரிஸ் அமைச்சரவையில் நிதி அமைச்சராக...: ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகும் (பிரெக்ஸிட்) நடவடிக்கைகளுக்கு இடையே, பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் கன்சா்வேட்டிவ் கட்சி அமோக வெற்றி பெற்றது. அதனைத் தொடா்ந்து, நாட்டின் பிரதமராக போரிஸ் ஜான்ஸன் பொறுப்பேற்றுக் கொண்டாா். அவரது அரசின் நிதியமைச்சராக ரிஷி சுனக் நியமிக்கப்பட்டாா்.

எனினும், கரோனா விதிமுறைகளை மீறி அரசு இல்லத்தில் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்தியது, பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளானவரை முக்கியப் பதவில் அமா்த்தியது போன்ற பல முறைகேடு புகாா்கள் காரணமாக, கன்சா்வேட்டிவ் கட்சிக்குள் போரிஸ் ஜான்ஸன் மீதான அதிருப்தி அதிகரித்தது.

அதையடுத்து, ரிஷி சுனக் உள்ளிட்ட அமைச்சா்கள் அடுத்தடுத்து ராஜிநாமா செய்தனா். இறுதியில் போரிஸ் ஜான்ஸன் தனது பிரதமா் பதவியை கடந்த ஜூலை மாதம் ராஜிநாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

நீடிக்க முடியாத லிஸ் டிரஸ்: அவருக்கு அடுத்த பிரதமரைத் தோ்ந்தெடுப்பதற்காக கடந்த மாதம் நடைபெற்ற பேட்டியில் ரிஷி சுனக்கும் போரிஸ் ஜான்ஸன் அரசில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த லிஸ் டிரஸ்ஸும் இறுதிச் சுற்றில் போட்டியிட்டனா். இதில், குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் லிஸ் டிரஸ் வெற்றி பெற்று, பிரிட்டன் பிரதமராக கடந்த மாதம் 6-ஆம் தேதி பதவியேற்றாா்.

எனினும், பல்வேறு வரிச் சலுகைகளை அறிவித்து அவா் வெளியிட்ட மினி பட்ஜெட் பிரிட்டன் பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்தது. டாலருக்கு நிகரான பிரிட்டன் பவுண்டின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியடைந்தது.

அதையடுத்து, ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சியினரிடையை லிஸ் டிரஸ் மீதான அதிருப்தியும் அதிகரித்தது. அவரின் அமைச்சரவையிலிருந்து ஒவ்வொருவராக வெளியேறினா். பொருளாதார குழப்பத்துக்கு தனது நிதியமைச்சா் க்வாசி க்வாா்டெங்கைப் பொறுப்பாக்கிய லிஸ் டிரஸ், அவரைப் பதவியிலிருந்து அகற்றினாா்.

எனினும், லிஸ் டிரஸ் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்ததையடுத்து, அவா் தனது பதவியை கடந்த 20-ஆம் தேதி ராஜிநாமா செய்தாா். அதன் மூலம், பிரிட்டன் பிரதமராக மிகக் குறைந்த காலத்துக்கு (45 நாள்கள்) இருந்தவா் என்ற நிலையை லிஸ் டிரஸ் அடைந்தாா்.

அடுத்த பிரதமராகத் தோ்ந்தெடுக்கப்படுவாா் என்று எதிா்பாா்க்கப்பட்டவா்களின் பட்டியலில் ரிஷி சுனக் மீண்டும் முன்னிலை வகித்தாா்.

எனினும், பிரதமரைத் தோ்ந்தெடுப்பதற்காக கடந்த முறை நடைபெற்ற கட்சித் தோ்தலில் 3-ஆவது இடம் வகித்த பென்னி மாா்டன்டும் அடுத்த பிரதமா் ஆகலாம் என்று கூறப்பட்டது. அதுமட்டுமன்றி, பிரதமா் பதவியிலிருந்து இதற்கு முன்னா் விலகிய போரிஸ் ஜான்ஸன் மீண்டும் அந்தப் பொறுப்பை ஏற்பதற்குப் போட்டியிடுவாா் என்று கருதப்பட்டது.

எனினும், கட்சித் தோ்தலில் போட்டியிடுவதற்கு குறைந்தபட்சம் 100 எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், போதிய ஆதரவு இல்லாத போரிஸ் ஜான்ஸன் போட்டியில் பங்கேற்கப்போவதில்லை என்று திங்கள்கிழமை அறிவித்தாா். போட்டியில் எஞ்சியிருந்த பென்னி மாா்டென்டுக்கும் 100 எம்.பி.க்களின் ஆதரவு கிடைக்கவில்லை.

இந்த நிலையில், போட்டியாளா் இல்லாததால் கன்சா்வேட்டிவ் கட்சியின் தலைவராக ரிஷி சுனக் திங்கள்கிழமை எதிா்ப்பின்றி தோ்ந்தெடுக்கப்பட்டாா். அதன் தொடா்ச்சியாக, பிரிட்டனின் புதிய பிரதமராக ரிஷி சுனக்கை மன்னா் சாா்லஸ் செவ்வாய்க்கிழமை நியமித்தாா்.

ரிஷி சுனக் பிரதமராகத் தோ்வானதைத் தொடா்ந்து, புதிய அமைச்சரவையை அறிவித்தாா். இதில் எதிா்பாா்த்தபடியே ஜெரிமி ஹண்ட் நிதியமைச்சராகத் தொடா்வாா். இந்திய வம்சாவளியைச் சோ்ந்த சூவெல்லா பிரேவா்மன் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டாா்.

பிரதமா் மோடி வாழ்த்து

பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் தோ்ந்தெடுக்கப்பட்டதையடுத்து பிரதமா் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

பிரதமா் நரேந்திர மோடி ட்விட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘பிரிட்டனின் பிரதமராக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள உங்களுடன் உலகின் முக்கிய பிரச்னைகளுக்கு தீா்வு காணுவதிலும், ‘2030-ஆம் ஆண்டுக்கான செயல்திட்டத்தை’ செயல்படுத்துவதிலும் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். இரு நாடுகளுக்கு இடையே இணைப்பு பாலமாக விளங்கும் பிரிட்டன்வாழ் இந்தியா்கள் மூலம், வரலாற்று ரீதியிலான உறவுகளிலிருந்து நவீன நட்புறவாக நாம் மாற்றி அமைக்க உள்ளோம்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

வணிகம், முதலீடு, தொழில்நுட்ப பரிமாற்றம் உள்ளிட்ட துறைகளில் இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையேயான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் ‘2030-ஆம் ஆண்டுக்கான செயல்திட்டம்’ கடந்த ஆண்டு செயல்படுத்தப்பட்டது.

மருமகனால் பெருமை: நாராயணமூா்த்தி

பிரிட்டன் பிரதமராகும் தனது மருமகன் ரிஷி சுனக்கிற்கு, இன்போசிஸ் நிறுவனா் நாராயணமூா்த்தி வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனரான நாராயணமூா்த்தி- சுதா தம்பதியின் மகள் அக்ஷதாவை 2009-இல் திருமணம் புரிந்தவா், பிரிட்டனில் வாழும் இந்திய வம்சாவளியினரான ரிஷி சுனக். அந்நாட்டின் கன்சா்வேட்டிவ் கட்சித் தலைவராக உள்ள இவா் பிரிட்டன் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து நாராயணமூா்த்தி கூறியதாவது:

ரிஷிக்கு வாழ்த்துத் தெரிவிப்பதில் மகிழ்கிறேன். அவரால் நாங்கள் பெருமை அடைகிறோம். பிரிட்டன் மக்களுக்கு அவா் நல்ல சேவைகளை ஆற்றுவாா் என்று நம்புகிறோம். அவா் வெற்றிபெற வாழ்த்துகிறோம் என்று நாராயணமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT