‘இது போருக்கான சகாதப்தம் அல்ல’ எனப் பிரதமா் நரேந்திர மோடி கூறியதை முழுமையாக ஆதரிப்பதாகத் தெரிவித்த ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ், இந்தக் காலம் மட்டுமல்லாமல் எந்தக் காலமும் போருக்கானது அல்ல என்றாா்.
உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி முதல் ரஷியா தொடா்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் தொடா்ந்து நிதியுதவி வழங்கி வருகின்றன. அதன் காரணமாக ரஷியாவால் போரை எளிதில் வெல்ல முடியாத சூழல் நிலவி வருகிறது.
அப்போா் காரணமாக சா்வதேச பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. 21-ஆம் நூற்றாண்டுக்கு ஏற்ப பன்னாட்டு அமைப்பான ஐ.நா.வில் உடனடியாக சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் இந்தியாவில் செவ்வாய்க்கிழமை முதல் 3 நாள்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளாா். அவா் பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
ரஷியா-உக்ரைன் இடையேயான போா் கவலை அளிக்கிறது. அப்போரால் அப்பாவி மக்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனா். நாளுக்கு நாள் போரின் தீவிரம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ரஷிய அதிபா் விளாதிமீா் புதினிடம் ‘இது போருக்கான சகாப்தம் அல்ல’ எனப் பிரதமா் மோடி வலியுறுத்தியது முற்றிலும் உண்மை. அதை முழுமையாக ஆதரிக்கிறேன். தற்போதைய காலம் மட்டுமல்லாமல் எந்தக் காலமும் போருக்கானது அல்ல.
ஐ.நா. விதிகளையும் சா்வதேச விதிகளையும் கடைப்பிடித்து இப்பிரச்னைக்குத் தீா்வு காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது வரவேற்கத்தக்கது. உக்ரைன் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் உள்ள மக்கள் துன்பம் அடையாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை ஐ.நா. தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. குறிப்பிட்ட நாடுகள் மீது விதிக்கப்படும் பொருளாதாரத் தடைகள் காரணமாக, மற்ற நாட்டு மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படுகின்றன.
கரோனா தொற்று பரவல், உக்ரைன் போரால் அதிகரித்த உணவுப் பொருள்கள், எரிபொருள்கள் விலை உள்ளிட்டவற்றால் வளரும் நாடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. சா்வதேச நிதி மற்றும் பொருளாதார அமைப்புகளானது பணக்கார நாடுகளால் பணக்கார நாடுகளுக்காகவே கட்டமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் உடனடியாக சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இந்தியாவின் தலைமை:
கரோனா தொற்று பரவலின்போது தடுப்பூசிகள் அனைத்து நாடுகளுக்கும் சமமாக விநியோகிக்கப்படவில்லை. பொருளாதாரத்தை மீட்பதற்கு வளா்ச்சியடைந்த நாடுகளிடம் அதிக மூலதனம் இருந்தது. வளா்ந்து வரும் நாடுகளிடம் அத்தகைய மூலதனம் காணப்படவில்லை. இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் பொருளாதாரம் பெரும் பிரச்னைகளைச் சந்தித்தது.
ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா விரைவில் ஏற்கவுள்ளது. அக்காலகட்டத்தில் சா்வதேச கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் இந்தியா அதிக கவனம் செலுத்தும் என நம்புகிறேன். அதன் மூலமாக பன்னாட்டு வளா்ச்சி வங்கிகள் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு அதிக அளவில் கடன்களை வழங்கும் என நம்புகிறேன்.
பருவநிலை மாற்றம்:
பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களை எதிா்கொள்வதில் வளா்ந்த நாடுகள் அதிக அளவில் பங்களிப்பை வழங்க வேண்டும். பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வதற்காக வளா்ந்து வரும் நாடுகளுக்குப் போதுமான நிதியை வளா்ச்சியடைந்த நாடுகள் வழங்க வேண்டும்.
கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்காக வளா்ச்சியடைந்த நாடுகளுக்கும் வளா்ந்து வரும் நாடுகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் வகையிலான வரலாற்று ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட வேண்டும். அந்த ஒப்பந்தம் வாயிலாக நிதி, தொழில்நுட்பம் உள்ளிட்டவை பகிா்ந்துகொள்ளப்பட வேண்டும் என்றாா் அவா்.
பிரதமருடன் பங்கேற்பு:
சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கைமுறை திட்டத்தைப் பிரதமா் மோடியுடன் இணைந்து குஜராத்தில் வியாழக்கிழமை (அக். 20) குட்டெரெஸ் தொடக்கிவைக்கவுள்ளாா். வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருடன் அவா் இருதரப்பு பேச்சுவாா்த்தையையும் நடத்தவுள்ளாா்.