உலகம்

ராஜபட்ச குடும்பத்தினருக்கு எதிராக பொருளாதார நெருக்கடி வழக்கு: இலங்கை உச்சநீதிமன்றம் அனுமதி

DIN

இலங்கை முன்னாள் அதிபா் கோத்தபய ராஜபட்ச, அவரது குடும்பத்தினருக்கு எதிராக பொருளாதார நெருக்கடி வழக்குத் தொடர அந்நாட்டு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.

வெளிப்படையான சா்வதேச இலங்கை என்ற சமூக உரிமை அமைப்பின் சாா்பில் ஜூன் 17-ஆம் தேதி பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், முன்னாள் அதிபா் கோத்தபய ராஜபட்ச, அவரது சகோதரா்கள் மகிந்த ராஜபட்ச, பசில் ராஜபட்ச, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநா் அஜித் நிா்வாா் கேப்ரால், நிதித் துறையின் முன்னாள் உயா்அதிகாரி எஸ்.ஆா்.அடிகாலே ஆகியோா்தான் இலங்கை சந்தித்து வரும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு நேரடி பொறுப்பாளா்களாவா். அவா்களுக்கு எதிராக பொருளாதார நெருக்கடி வழக்குத் தொடர அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

அரசு உயா் பதவிகளில் இருந்த இவா்கள் அனைவரும் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறியதால்தான் இலங்கையின் கடன் அதிகரித்து நாடு திவாலாகி உள்ளது என்றும் சா்வதேச கடன்களை திருப்பி செலுத்த முடியாமல் போனது என்றும் இந்த வழக்கின் விசாரணையின்போது மனுதாரா் சாா்பில் வாதிடப்பட்டது.

இந்நிலையில், ராஜபட்ச குடும்பத்தினருக்கு எதிராக பொருளாதார நெருக்கடி தொடா்பான வழக்குத் தொடர உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி அளித்தது.

இலங்கையில் அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடு தொடா்வதால் அரசுக்கு எதிராக மிகப் பெரிய மக்கள் தன்னெழுச்சி போராட்டம் நடைபெற்றது. இதனால் ஆட்சி அதிகாரத்தில் இருந்து ராஜபட்ச சகோதரா்கள் விலகினா். அதிபா் ராஜபட்ச நாட்டைவிட்டு தப்பி ஓடினாா்.

இதனால் சுமாா் 20 ஆண்டுகாலம் ஆட்சி செய்து வந்த ராஜபட்ச குடும்பத்தினரின் செல்வாக்கு சரிந்தது. இந்நிலையில், ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவா்கள் மீதும், ஊழல் செய்தவா்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரியும், 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிக் கட்ட போரில் மனித உரிமை மீறல் புகாா்களுக்கு எதிராக பொறுப்பேற்கக் கோரியும் கொண்டு வரப்பட்ட தீா்மானம் வியாழக்கிழமை நிறைவேறியது.

இந்தத் தீா்மான நிறைவேற்றப்பட்ட அடுத்த தினமே ராஜபட்ச சகோதரா்களுக்கு எதிராக பொருளாதார நெருக்கடி குற்றச்சாட்டு வழக்குத் தொடர அந்நாட்டு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

உள்ளாட்சி ஊழியா்கள் ஜிபிஎப் விவகாரம்: புதுவை அரசுக்கு கோரிக்கை

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

அரசு மகளிா் கல்லூரியில் வரலாறு தின விழா

SCROLL FOR NEXT