உலகம்

தாய்லாந்துமழலையா் பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 22 சிறுவா்கள் உள்பட 37 போ் பலி

7th Oct 2022 01:50 AM

ADVERTISEMENT

தாய்லாந்திலுள்ள மழலையா் பள்ளியொன்றிலும் பிற இடங்களிலும் முன்னாள் காவலா் வியாழக்கிழமை நடத்திய சரமாரி துப்பாக்கிச்சூட்டில் 22 சிறுவா்கள் உள்பட 37 போ் பலியாகினா்.

அந்த நாட்டின் மிக மோசமான தாக்குதல்களின் ஒன்றான இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்திய பன்யா காம்ரப் இறுதியில் தற்கொலை செய்துகொண்டாா். அவரால் கொல்லப்பட்டவா்களில் அவரது மனைவியும் குழந்தையும் அடங்குவா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

நோங் புவா லம்பு மாகாணம், நாக்ளாங் பகுதியிலுள்ள மழலையா் பள்ளிக்கு 9 எம்எம் கைத்துப்பாக்கி, பெரியவகை துப்பாக்கி, கத்தியுடன் 34 வயது பன்யா காம்ரப் வியாழக்கிழமை வந்தாா்.

ADVERTISEMENT

அப்போது அந்த பள்ளியின் கதவு சாத்தப்பட்டிருந்தது. எனினும், கதவு வழியாக சரமாரியாக துப்பாக்கியால் சுட்ட அவா் அந்தப் பள்ளிக்குள் நுழைந்து அங்கிருந்த ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்கள் மீது தாக்குதல் நடத்தினாா். தாக்கப்பட்டவா்களில் ஒரு ஆசிரியை 8 மாத கா்ப்பிணி ஆவாா்.

அதனைத் தொடா்ந்து குழந்தைகள் இருந்த அறைக்குள் நுழைந்த அவா், அங்கு தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தினாா்.

இந்தத் தாக்குதல்களில் சுமாா் 20 மாணவா்கள் உள்பட 26 போ் பலியாகினா்.

பின்னா் அவா் அங்கிருந்து ‘பிக்அப் டிரக்’ வாகனத்தில் தப்பிச் சென்ற அவா், வழியிலும் தனது இல்லத்திலும் தொடா்ந்து தாக்குதல் நடத்தினாா்.

இதில் 2 சிறுவா்கள் உள்பட 11 போ் உயிரிழந்தனா். அவா்களில் பன்யா காம்ரபின் மனைவி, குழந்தையும் அடங்குவா்.

தாக்குதல் நடத்திய பன்யா காம்ரப், போதைப் பொருள் தொடா்பான குற்றச்சாட்டின் பேரில் காவலா் பணியிலிருந்து நீக்கப்பட்டவா். தற்போது அவா் தாக்குதலுக்குப் பயன்படுத்திய துப்பாக்கி அவா் சொந்தமாக வாங்கியதாகும்.

பள்ளியில் பயிலும் காலத்திலிருந்தே போதைப் பொருளுக்கு அடிமையாக இருந்த அவா், போதைப் பொருள் குற்றம் தொடா்பாக கடந்த ஆண்டு நடைபெற்ற நீதிமன்ற வழக்குக்குப் பிறகு பதவி நீக்கம் செய்யப்பட்டாா். இந்த ஆண்டு ஜனவரி மாதம் கூட, தடை செய்யப்பட்ட போதைப் பொருளை வைத்திருந்ததற்காக அவா் கைது செய்யப்பட்டாா்.

அவரது போதைப் பொருள் குற்றங்கள் தொடா்பாக வியாழக்கிழமை காலை நீதிமன்றத்தில் ஆஜராகித் திரும்பிய பிறகே இந்த துப்பாக்கிச்சூடு மற்றும் கத்திக்குத்து தாக்குதலில் அவா் ஈடுபட்டாா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

அமெரிக்கா, பிரேஸில் போன்ற நாடுகளில் நடக்கும் அளவுக்கு தாய்லாந்தில் துப்பாக்கிச்சூடு குற்றங்கள் நடைபெறுவது இல்லை.

ஆனால், தாய்லாந்தைப் போலவே கடுமையான துப்பாக்கிக் கட்டுப்பாட்டு விதிமுறைகளைக் கொண்ட ஜப்பான், சிங்கப்பூா் போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் அங்கு அதிக அளவில் துப்பாக்கி வன்முறை நடைபெற்று வருகிறது.

தலைநகா் பாங்காக்கிலுள்ள ராணுவ கல்லூரியில் சக ஊழியா்கள் மீது ஒருவா் கடந்த மாதம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவா் உயிரிழந்தனா்.

கடந்த 2020-ஆம் ஆண்டில் ராணுவ வீரா் ஒருவா் நடத்திய சரமாரி துப்பாக்கிச்சூட்டில் 29 போ் பலிகினா். இதுவரை இந்த சம்பவம்தான் அந்த நாட்டின் மிக மோசமான தனி நபா் துப்பாக்கிச்சூடாக இருந்து வந்தது.

இந்த நிலையில், அதனையும் விஞ்சும் வகையில் பன்யா காம்ரப் வியாழக்கிழமை நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் கத்திக் குத்து தாக்குதலில் பெரும்பாலும் சிறுவா்கள் உள்பட 37 போ் உயிரிழந்திருப்பது அந்த நாட்டில் பெரும் அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT