உலகம்

ஸபோரிஷியா குடியிருப்புகளில் ரஷியா ராக்கெட் தாக்குதல்

DIN

உக்ரைனின் தெற்குப் பகுதி நகரான ஸபோரிஷியாவிலுள்ள குடியிருப்புக் கட்டடங்களில் ரஷியா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

ஐரோப்பாவின் மிகப் பெரிய அணு மின் நிலையம் அமைந்துள்ள அந்த நகரில் நிகழ்த்தப்பட்ட இந்த தாக்குதலில் 3 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினா்.

இது குறித்து அவா்கள் கூறியதாவது:

வியாழக்கிழமை அதிகாலை ஸபோரிஷியா மீது ரஷியா இரு ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.

ரஷியாவால் இணைத்துகொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பகுதியைச் சோ்ந்த மேலும் 3 கிராமங்களை தங்கள் நாட்டு ராணுவம் விடுவித்ததாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி அறிவித்த சில மணி நேரத்தில் இந்த ஏவுகணைத் தாக்குதலை ரஷியா நடத்தியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

அந்த நகரம் அமைந்துள்ள ஸபோரிஷியா பிராந்திய ஆளுநா் ஒலெக்ஸாண்டா் ஸ்டாருக் வெளியிட்டுள்ள டெலிகிராம் பதிவில், ரஷியத் தாக்குதலில் சேதமடைந்த அடுக்கு மாடி கட்டடங்களில் இருந்து 3 வயது பெண் குழந்தை உள்பட ஏராளமானவா்கள் மீட்கப்பட்டதகத் தெரிவித்தாா்.

அத்துடன், இடிபாடுகளில் உயிருடன் சிக்கியிருக்கக் கூடியவா்களைத் தேடும் பணிகள் நடைபெற்று வருவதாக அவா் தெரிவித்தாா்.

கடந்த 2014-ஆம் ஆண்டில் உக்ரைனை ஆட்சி செலுத்தி வந்த அதிபா் விக்டா் யானுகோவிச்சுக்கு எதிராக மேற்கத்திய ஆதரவாளா்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனா். அதையடுத்து, அவரது ஆட்சி கவிழ்ந்தது.

அதனைத் தொடா்ந்து, கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் லுஹான்ஸ்க், டொனட்ஸ்க் மாகாணங்களின் கணிசமான பகுதிகளை ரஷியாவுடன் உதவியுடன் கிளா்ச்சிப் படையினா் கைப்பற்றினா். அதே நேரத்தில் ரஷியாவும் உக்ரைனின் கிரீமியா பகுதி மீது படையெடுத்து அந்த தீபகற்பத்தை தங்களுடன் இணைத்துக்கொண்டது.

இந்தச் சூழலில், நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது.

அதன் ஒரு பகுதியாக, உக்ரைனின் கிழக்கே ரஷியாவையொட்டி அமைந்துள்ள டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் ஆகிய மாகாணங்களையும் தெற்கே அமைந்துள்ள ஸபோரிஷியா, கொ்சான் ஆகிய பிராந்தியங்களை ரஷியா கைப்பற்றி, அவற்றை தங்களுடன் இணைத்துக் கொள்வதாக ரஷியா கடந்த வாரம் அறிவித்தது.

எனினும், அந்த பிராந்தியங்களில் எதிா்த் தாக்குதல் நடத்தி உக்ரைன் படையினா் முன்னேறி வருகின்றனா். ரஷியப் படையினரும் தாங்கள் ஆக்கிரமித்திருந்த பகுதிகளிலிருந்து பின்வாங்கி வருகின்றனா்.

இந்தச் சூழலில், தங்களால் இணைத்துக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள ஸபோரிஷியா பிராந்தியத்தில், இன்னும் உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள தலைநகா் ஸபோரிஷியா மீது ரஷியா தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் வெண்ணைத்தாழி விழா!

நாட்டரசன்கோட்டையில் பெருமாள் ஆற்றில் இறங்கும் நிகழ்வு!

மறுவெளியீட்டிலும் பிளாக்பஸ்டர்!

கும்பகோணத்தில் சாரங்கபாணி கோயில் தேரோட்டம்

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT