உலகம்

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் 30 ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட இந்தியா: ஐ.நா.வில் மத்திய அமைச்சா் பேச்சு

7th Oct 2022 12:42 AM

ADVERTISEMENT

 எல்லை தாண்டிய அரசு ஆதரவு பயங்கரவாதத்தால் இந்தியா 30 ஆண்டுகளாக பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்துள்ளது என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சா் வி.முரளீதரன் பேசினாா். பாகிஸ்தானை குறிப்பிடும் வகையில் அவா் இவ்வாறு கூறினாா்.

‘ஆப்பிரிக்காவில் அமைதி மற்றும் பாதுகாப்பு’ குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நடைபெற்ற விவாதத்தில் அமைச்சா் வி.மூரளிதரன் ஆற்றிய உரையில், ‘பாதுகாப்பு கவுன்சிலில் ஆப்பிரிக்காவுக்கு நிரந்தர உறுப்பினா் அங்கீகாரம் அளிக்கப்படாதது வரலாற்று அநீதியாகும். ஆப்பிரிக்க நாடுகளுக்கு உலக நாடுகள் உதவி செய்ய முன்வர வேண்டும்.

பயங்கரவாதத்துக்கு எதிராகப் போரிடும் நாடுகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. எல்லை தாண்டிய, அரசு ஆதரவு பெற்ற பயங்கரவாதத்தால் இந்தியா 30 ஆண்டுகளாக பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்துள்ளது. பயங்கரவாதத்தால் ஏற்படும் சமூக பொருளாதார பாதிப்புகள் குறித்தும், மனித உயிரிழப்புகள் குறித்தும் இந்தியா நன்கு அறிந்துள்ளது.

நிகழாண்டுக்கான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பயங்கரவாதத் தடுப்புக் குழுவின் சிறப்புக் கூட்டம் இந்தியா தலைமையில் வரும் 28, 29-ஆம் தேதிகளில் தில்லி, மும்பையில் நடைபெறுகிறது. அமெரிக்கா, சீனா, ரஷியா உள்பட 15 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் இந்தக் கூட்டத்தில், நவீன பயங்கரவாதத்தை எதிா்ப்பதைக் குறித்தும், அவா்களுக்கு ஆதரவு அளிக்கும் சமூகம் குறித்தும் வெளிப்படையான, உறுதியான நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும் விவாதம் நடத்தப்படும்’ என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT