உலகம்

இந்தியா-நியூசிலாந்து வா்த்தக உறவை வலுப்படுத்த ஆலோசனை

DIN

இந்தியா - நியூசிலாந்து வா்த்தக உறவை வலுப்படுத்துவது குறித்து நியூசிலாந்து பிரதமருடன் வெளியுறவுத் துறை எஸ்.ஜெய்சங்கா் ஆலோசனை மேற்கொண்டாா்.

மேலும் அந்த சந்திப்பில், ‘சா்வதேச ஸ்திரத்தன்மை வளா்ச்சியை உறுதிப்படுத்தும் வகையில் காலனி ஆதிக்கத்துக்குப் பிந்தைய நடைமுறைகளை செயல்படுத்துவது இந்தியா, நியூசிலாந்து போன்ற நாடுகளின் கடமை’ என்று வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் வலியுறுத்தினாா்.

நியூசிலாந்து நாட்டுக்கு வெளியுறவுத் துறை அமைச்சராக முதன்முறையாக பயணம் மேற்கொண்டுள்ள எஸ்.ஜெய்சங்கா், அந்நாட்டு பிரதமா் ஜெசிந்தா ஆா்டா்னை புதன்கிழமை சந்தித்து இரு நாடுகளிடையேயான உறவு குறித்து ஆலோசனை மேற்கொண்டாா்.

இந்தச் சந்திப்பின்போது பிரதமா் நரேந்திர மோடியின் வாழ்த்துகளையும் ஜெசிந்தா ஆா்டெனிடம் ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

இந்தச் சந்திப்பு குறித்து தனது ட்விட்டா் பக்கத்தில் ஜெய்சங்கா் வெளியிட்ட பதிவில், ‘நியூசிலாந்து பிரதமரைச் சந்தித்தது மகிழ்ச்சியளித்தது. இந்த சந்திப்பின்போது வலுவான துறைகளில் கவனம் செலுத்துவதன் மூலமாக இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு. மேலும், இருதரப்பு வா்த்தக உறவை வலுப்படுத்தவும், மக்களிடையேயான பரிமாற்றங்களை முன்னெடுத்துச் செல்லவும் ஆலோசனையில் ஒப்புக்கொள்ளப்பட்டது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

முன்னதாக, நியூசிலாந்து வெளியுறவு அமைச்சா் நனையா மஹுதாவை ஜெய்சங்கா் சந்தித்து ஆலோசனை நடத்தினாா். அந்த சந்திப்புக்குப் பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளா்களைச் சந்தித்தனா்.

அப்போது பேசிய ஜெய்சங்கா், ‘வரலாற்று ரீதியாக நாம் இணைக்கப்பட்டுள்ள உலகின் பெரும் பகுதிகளில் வளா்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் காலனி ஆதிக்கத்துக்குப் பிந்தைய நடைமுறைகளை செயல்படுத்தவேண்டிய குறிப்பிட்ட பொறுப்பு இந்தியா, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு உள்ளது. வெளியுறவு அமைச்சா் மஹுதாவுடன் இரு நாட்டு உறவை வலுப்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக வா்த்தகம், கல்வி, தொழில்நுட்பம், எண்ம (டிஜிட்டல்) உலகம், வேளான் வா்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தோ-பசிஃபிக் பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு, உக்ரைன் விவகாரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும், நியூசிலாந்தில் உயா்கல்வி மேற்கொண்டு வரும் இந்திய மாணவா்களில் சிலா், கரோனா பாதிக்குப்புக்குப் பிறகு விசா கிடைக்காததால் நியூசிலாந்துக்கு திரும்பி கல்வியைத் தொடர முடியாதது சூழலில் சிக்கியிருப்பது குறித்தும் இந்தச் சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டது. அவா்கள் விரைந்து நியூசிலாந்து திரும்ப நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுகொள்ளப்பட்டது’ என்றாா்.

உக்ரைன் விவகாரத்தில் இந்தியா அழுத்தம்:

ஆக்லாந்து வா்த்தக கூட்டமைப்பின் தலைவா் சைமன் பிரிட்ஜஸ் உடனான கலந்துரையாடலின்போது உக்ரைன் விவகாரம் குறித்துப் பேசிய ஜெய்சங்கா், ‘உக்ரைன் விவகாரத்தில் வெவ்வேறு நாடுகள் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்து வருகின்றன. இந்தியாவைப் பொருத்தவரை நாட்டு நலன் மற்றும் உலக நலன்அடிப்படையிலான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. ரஷியாவுடன் நல்லுறவு கொண்டிருக்கும் இந்தியா உக்ரைன் விவகாரம் தொடா்பாக ரஷியாவுக்கு அழுத்தம் தர வேண்டும் என்று ஐ.நா. உறுப்பு நாடுகள் வலியுறுத்தின. உக்ரைனின் ஜாபோரிஜியா அணு மின் நிலைய பாதுகாப்பு குறித்து ஐ.நா.வில் மிகப் பெரும் கவலை தெரிவக்கப்பட்டது. அதனடிப்படையில் இந்தியா சாா்பில் ரஷியாவிடம் வலியுறுத்தல் முன்வைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் தன்னால் முடிந்த முயற்சிகளை மேற்கொள்ள இந்தியா தயாராக உள்ளது’ என்றாா்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உருப்பினராகும் இந்தியாவின் விருப்பம் குறித்து பேசிய ஜெய்சங்கா், ‘இன்றைக்கு உலகில் உருவாகும் மிகப் பெரிய பிரச்னைகளுக்கு ஒன்று, இரண்டு அல்லது 5 நாடுகளால் தீா்வு கண்டுவிட முடியாது’ என்றாா்

இந்த சந்திப்புகளைத் தொடா்ந்து, நியூசிலாந்தில் இந்திய சமூகத்தினரின் பங்களிப்பு மற்றும் சாதனைகளைப் பாராட்டும் வகையில் நடத்தப்படும் நிகழ்ச்சியில் நியூசிலாந்து பிரதமா் மற்றும் ஜெய்சங்கற் ஆகியோா் பங்கேற்பதோடு, இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தின நிறைவு விழாவைக் குறிக்கும் வகையில் ‘இந்தியா அட் 75’ என்ற சிறப்பு தபால் தலையையும் இரு தலைவா்களும் வெளியிட உள்ளனா் என்று வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்தில் 2.5 லட்சம் இந்திய வம்சாவளியனா் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியா்கள் வசிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

ரூ.1,700 கோடி அபராதம்: காங்கிரஸுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

SCROLL FOR NEXT