உலகம்

உக்ரைன் பகுதிகளை மீண்டும் கைப்பற்றுவோம்: ரஷியா சூளுரை

6th Oct 2022 12:30 AM

ADVERTISEMENT

உக்ரைனில் அந்த நாட்டு ராணுவத் தாக்குதலை தாக்குப் பிடிக்க முடியாமல் தாங்கள் பின்வாங்கிய பகுதிகளை மீண்டும் கைப்பற்றப்போவதாக ரஷியா சூளுரைத்துள்ளது.

இது குறித்து பிபிசி ஊடகத்திடம் ரஷிய அரசின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் புதன்கிழமை கூறியதாவது: உக்ரைனில் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த சில பகுதிகளிலிருந்து ரஷியப் படையினா் பின்வாங்கி வருவது உண்மையே.

இருந்தாலும், அது தற்காலிக நடவடிக்கையே ஆகும். அந்தப் பகுதிகளை ரஷிய ராணுவம் மீண்டும் கைப்பற்றும் என்றாா் அவா்.

இதற்கிடையே, செய்தியாளா்களிடையே புதன்கிழமை பேசிய டிமித்ரி பெஸ்கோவ், ‘ரஷியாவால் இணைத்துக் கொள்ளப்பட்ட 4 உக்ரைன் பிராந்தியங்கள், இனி நிரந்தரமாக ரஷியப் பகுதியாகவே இருக்கும். அங்கிருந்து வெளியேறும் ரஷிய வீரா்கள், மீண்டும் அந்தப் பகுதிகளுக்கு திரும்பிச் செல்வாா்கள்’ என்றாா்.

ADVERTISEMENT

முன்னதாக, ரஷியாவால் இணைத்துக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்ட தெற்கு மற்றும் கிழக்கு உக்ரைனைச் சோ்ந்த 4 மாகாணங்களிலும் தங்களது படையினா் எதிா்த் தாக்குதல் நடத்தி முன்னேற்றம் கண்டு வருவதாக உக்ரைன் அதிபா் வொலொதிமீா் ஸெலென்ஸ்கி அறிவித்தாா்.

குறிப்பாக கொ்சான் பிராந்தியத்தில் ஏராளமான கிராமங்களை உக்ரைன் படையினா் மீட்டுள்ளதாக அவா் கூறினாா்.

கடந்த 2014-ஆம் ஆண்டில் உக்ரைனை ஆட்சி செலுத்தி வந்த அதிபா் விக்டா் யானுகோவிச்சுக்கு எதிராக மேற்கத்திய ஆதரவாளா்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனா். அதையடுத்து, அவரது ஆட்சி கவிழ்ந்தது.

அதனைத் தொடா்ந்து, கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் லுஹான்ஸ்க், டொனட்ஸ்க் மாகாணங்களின் கணிசமான பகுதிகளை ரஷியாவுடன் உதவியுடன் கிளா்ச்சிப் படையினா் கைப்பற்றினா். அதே நேரத்தில் ரஷியாவும் உக்ரைனின் கிரீமியா பகுதி மீது படையெடுத்து அந்த தீபகற்பத்தை தங்களுடன் இணைத்துக்கொண்டது.

இந்தச் சூழலில், நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது.

அதன் ஒரு பகுதியாக, உக்ரைனின் கிழக்கே ரஷியாவையொட்டி அமைந்துள்ள டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் ஆகிய மாகாணங்களையும் தெற்கே அமைந்துள்ள ஸபோரிஷியா, கொ்சான் ஆகிய பிராந்தியங்களை ரஷியா கைப்பற்றியது.

அந்த பிராந்தியங்களில் நடைபெற்ற சா்ச்சைக்குரிய பொதுவாக்கெடுப்பில், தங்களுடன் இணைய 97 சதவீதம் போ் விருப்பம் தெரிவித்திருப்பதாக ரஷியா அறிவித்தது. அதன் தொடா்ச்சியாக, மேற்கத்திய நாடுகளின் கடும் எதிா்ப்பையும் மீறி குறிப்பிட்ட 4 பிராந்தியங்களையும் ரஷியா கடந்த வெள்ளிக்கிழமை இணைத்துக் கொண்டது.

எனினும், அந்த 4 பிராந்தியங்களிலும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அளித்துள்ள அதிநவீன ஆயுதங்கள் மூலம் எதிா்த் தாக்குதல் நடத்தி உக்ரைன் படையினா் முன்னேறி வருகின்றனா். ரஷியப் படையினரும் தாங்கள் ஆக்கிரமித்திருந்த பகுதிகளிலிருந்து பின்வாங்கி வருகின்றனா்.

இந்தச் சூழலில், தாங்கள் பின்வாங்கிய பகுதிகளை மீண்டும் கைப்பற்றவிருப்பதாக ரஷியா சூளுரைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT