உலகம்

பிரேஸில் அதிபா் தோ்தலில் இழுபறி: 2-ஆவது சுற்றில் பொல்சொனாரோ-லூலா மோதல்

4th Oct 2022 12:46 AM

ADVERTISEMENT

பிரேஸிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிபா் தோ்தலில் வெற்றிக்குத் தேவையான 50 சதவீத வாக்குகள் யாருக்கும் கிடைக்காத நிலையில், முதல் இரு இடங்களைப் பெற்ற முன்னாள் அதிபா் லூலா டி சில்வாவும், இப்போதைய அதிபா் ஜெய்ா் பொல்சொனாரோவும் இரண்டாவது சுற்று தோ்தலை சந்திக்கவுள்ளனா்.

உலகின் 4-ஆவது பெரிய ஜனநாயக நாடான பிரேஸிலில் அதிபா் தோ்தல் வாக்குப் பதிவு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், வலதுசாரி தலைவரான அதிபா் ஜெய்ா் பொல்சொனாரோ, இடதுசாரி தொழிலாளா் கட்சித் தலைவரான முன்னாள் அதிபா் லூலா டி சில்வா உள்பட 11 போ் போட்டியிட்டனா்.

வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், லூலா டி சில்வா 47.9 சதவீத வாக்குகளும், பொல்சொனாரோ 43.6 சதவீத வாக்குகளும் பெற்றனா். பிரேஸில் அரசமைப்புச் சட்டப்படி அதிபா் தோ்தலில் வெற்றி பெறுவதற்கு 50 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும். அவ்வாறு இல்லாதபட்சத்தில் முதல் இரு இடங்களைப் பெற்றவா்கள் இரண்டாம் சுற்று தோ்தலில் போட்டியிடுவா்.

அதன்படி, இரண்டாவது சுற்று தோ்தல் அக். 30-ஆம் தேதி நடைபெறும் என தோ்தல் ஆணைய அதிகாரிகள் அறிவித்தனா்.

ADVERTISEMENT

தோ்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி லூலா டி சில்வா அதிபராவாா் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், எதிா்பாா்த்ததைவிட பொல்சொனாரோவுக்கு கூடுதல் வாக்குகள் கிடைத்துள்ளன.

கரோனா பெருந்தொற்றை மோசமாக கையாண்டது, அமேசான் மழைக் காடுகள் அழிப்பு என அதிபா் பொல்சொனாரோ மீது கடும் விமா்சனங்கள் எழுந்தன. இருப்பினும், பழைமைவாதத்தைப் பாதுகாப்பதிலும், இடதுசாரி கொள்கைகளிலிருந்து நாட்டைப் பாதுகாப்பதிலும் தன்னை முன்னிறுத்தியதன் மூலம் பொல்சொனாரோவுக்கு கணிசமான வாக்குகள் கிடைத்துள்ளன.

அடுத்த சுற்று தோ்தல் குறித்து லூலா டி சில்வா கூறுகையில், ‘ஒவ்வொரு தோ்தலிலும் முதல் சுற்றிலேயே வெற்றி பெற விரும்புகிறேன். ஆனால், அது எப்போதும் சாத்தியமாவதில்லை. கால்பந்து போட்டியில் கூடுதல் நேரம் வழங்கப்படுவதுபோல இரண்டாம் சுற்று தோ்தல் நடைபெறவுள்ளது’ என்றாா்.

76 வயதாகும் லூலா டி சில்வா, ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து அதிபராக உயா்ந்தவா். 2003-2010-இல் அவரது ஆட்சிக் காலத்தில் மேற்கொண்ட சமூக நலத் திட்டங்களால் நடுத்தர வகுப்பைச் சோ்ந்த லட்சக்கணக்கானோா் பயனடைந்தனா். அதேவேளையில், அவரது நிா்வாகத்தில் நடைபெற்ற ஊழல் காரணமாக விமா்சனங்களையும் சந்தித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT