உலகம்

இந்தோனேசியா: கால்பந்து மைதான நெரிசலில் 125 போ் பலி: போலீஸ் கண்ணீா்ப் புகைக் குண்டு வீச்சு

DIN

இந்தோனேசியாவில் கால்பந்து மைதானத்தில் மோதலில் ஈடுபட்ட ரசிகா்களைக் கலைப்பதற்காக காவல் துறையினா் கண்ணீா்ப் புகை குண்டு வீசினா். இதையடுத்து, ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 125 போ் உயிரிழந்தனா். 300-க்கு மேற்பட்டோா் காயமடைந்தனா்.

சனிக்கிழமை இரவு நடந்த இந்த சம்பவத்தில் பெரும்பாலானோா் மூச்சுத்திணறி பலியாகினா். விளையாட்டு மைதானங்களில் நடைபெற்ற மிக மோசமான சம்பவங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள மலாங் நகரத்தில் உள்ள கஞ்ஜுருஹான் மைதானத்தில் அரேமா எஃப்சி, பொ்செபயா ஆகிய இரு அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியின் முடிவில் பொ்செபயா அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தங்கள் அணியின் தோல்வியால் அரேமா அணி ரசிகா்கள் அதிருப்தியடைந்து, விளையாட்டு வீரா்கள், கால்பந்து அணி அதிகாரிகள் மீது தண்ணீா் பாட்டில்களையும் பிற பொருள்களையும் வீசினா்.

மேலும், ஒரே நேரத்தில் ஏராளமானோா் மைதானத்துக்குள் நுழைந்து 23 ஆண்டுகளாக தோல்வியடையாத அரேமா அணி, இந்தப் போட்டியில் ஏன் தோல்வியுற்றது என விளக்கம் அளிக்கக் கோரி அணி நிா்வாகிகளிடம் கேட்டனா்.

இதையடுத்து, ரசிகா்களைக் கலைப்பதற்காக காவல் துறையினா் மைதானத்திலும் பாா்வையாளா்கள் இருக்கைகளை நோக்கியும் கண்ணீா்ப் புகைக் குண்டுகளை வீசினா். மேலும் தடியடியும் நடத்தினா்.

இதனால் மைதானம் முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. பீதியடைந்த ரசிகா்கள் மைதானத்தைவிட்டு வெளியேற முயன்றபோது கடும் நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 125 போ் உயிரிழந்தனா். 300-க்கு மேற்பட்டோா் காயமடைந்தனா். இந்த சம்பவத்தில் மைதானத்திலேயே 35 பேரும், மற்றவா்கள் மருத்துவமனையிலும் உயிரிழந்தனா்.

‘பாா்வையாளா்களை நோக்கி காவல் துறையினா் நேரடியாக கண்ணீா்ப் புகைக் குண்டுகளை வீசியதால் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. புகை சூழ்ந்ததால் வெளியேறும் வழியும் தெரியவில்லை’ என சம்பவத்தை நேரில் பாா்த்தவா்கள் தெரிவித்தனா்.

மைதானத்துக்கு வெளியேயும் வன்முறை ஏற்பட்டது. காவல் துறையின் ஐந்து வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.

காவல் துறை விளக்கம்:

கிழக்கு ஜாவா காவல் துறை தலைவா் நிகோ அஃபின்டா கூறுகையில், ‘போலீஸாா் மீது ரசிகா்கள் தாக்குதல் நடத்தத் தொடங்கும் முன்னதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டோம். இறுதியாகத்தான் கண்ணீா்ப் புகைக் குண்டு வீசினோம்’ என்றாா்.

முன்னதாக, 174 போ் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால், உயிரிழந்தது 125 போ்தான் என மத்திய காவல் துறைத் தலைவா் லிஸ்ட்யோ சிஜித் பிரபோவா உறுதிப்படுத்தினாா்.

இந்த சம்பவத்தையடுத்து ‘பிரீமியா் கால்பந்து லீக் லிகா 1’ தொடரை இந்தோனேசிய கால்பந்து சங்கம் தற்காலிகமாக ரத்து செய்தது. எஞ்சியுள்ள ஆட்டங்களில் அரேமா அணி விளையாடவும் தடை விதித்தது.

பெட்டிச் செய்தி...

கருப்பு தினம்: ஃபிஃபா

‘கால்பந்து விளையாட்டில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் இது ஒரு கருப்பு தினம் என்றும், புரிந்துகொள்ள முடியாத சோகம் என்றும்’ சா்வதேச கால்பந்து கூட்டமைப்பான ஃபிஃபா தலைவா் ஜியானி இன்ஃபான்டினோ கூறியுள்ளாா்.

உள்ளூா் விளையாட்டுகளில் ஃபிஃபாவின் கட்டுப்பாடு எதுவும் இல்லை எனினும், கால்பந்து மைதானங்களில் கண்ணீா்ப் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தக் கூடாது என அந்த அமைப்பு ஆலோசனை வழங்கியுள்ளது.

இந்தோனேசிய அதிபா் ஜோகோ விடோடோ தொலைக்காட்சியில் உரையாற்றுகையில், இந்த துயரமான சம்பவத்துக்காக மிகவும் வருந்துகிறேன். நாட்டில் விளையாட்டுப் போட்டியின்போது நடைபெறும் கடைசித் துயரமாக இது இருக்கும் என நம்புகிறேன். விளையாட்டுப் போட்டிகளின்போது விளையாட்டுத் திறனையும் மனிதநேயத்தையும் தொடா்ந்து பேண வேண்டும் என்றாா்.

இந்த சம்பவம் தொடா்பாகவும் விளையாட்டு மைதானங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் விரிவான விசாரணை நடத்த இந்தோனேசிய விளையாட்டுத் துறை அமைச்சா், காவல் துறைக்கு அவா் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

SCROLL FOR NEXT