உலகம்

உக்ரைன் அதிபரின் சொந்த நகரத்தில் ஆளில்லா விமானம் மூலம் ரஷியா தாக்குதல்

3rd Oct 2022 01:01 AM

ADVERTISEMENT

உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியின் சொந்த நகரத்தில் ஆளில்லா விமானங்கள் மூலம் ரஷியா ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தியது.

உக்ரைனின் தெற்குப் பகுதியில் உள்ள அதிபா் ஸெலென்ஸ்கியின் சொந்த நகரமான கிா்வி ரிஹ் நகரில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் ஒரு பள்ளி மற்றும் இரு அடுக்குமாடி குடியிருப்புகள் சேதமடைந்தன. கடந்த சில வாரங்களாக ஈரானில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானங்களைக் கொண்டு உக்ரைன் நகரங்களில் ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை ஆளில்லா விமானங்கள் ஐந்தை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைனின் விமானப் படை அதிகாரிகள் தெரிவித்தனா். ஸபோரிஷியா நகரத்தின் மீதும் ரஷிய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக அவா்கள் தெரிவித்தனா்.

ரஷிய அதிபா் புதின் அணு ஆயுதப் பயன்பாடு குறித்து அச்சுறுத்தி உள்ள நிலையில், ஸபோரிஷியா அணுமின் நிலையம் குறித்து விவாதிக்க சா்வதேச அணுசக்தி முகமையின் தலைவா் ரஃபேல் குரோஸி அடுத்த சில நாள்களில் கீவ் மற்றும் மாஸ்கோவுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக அந்த முகமை ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

உக்ரைன் பகுதியில் உள்ள இந்த அணுமின் நிலையத்தை ரஷியா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. இருப்பினும், தொடா்ந்து செயல்பட்டு வந்த அணுமின் நிலையத்தின் கடைசி அணு உலையானது பாதுகாப்பு காரணங்களுக்காக செப்டம்பா் மாதம் மூடப்பட்டது.

ரஷியாவுடன் இணைக்கப்பட்ட நான்கு பிராந்தியங்களில், ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான ஸபோரிஷியா அணுமின் நிலையம் அமைந்துள்ள பகுதியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் கட்டுப்பாட்டில் லைமன் நகரம்: பாதுகாப்பு ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த லைமன் நகரம் உக்ரைன் படைகளின் கட்டுப்பாட்டுக்குள் ஞாயிற்றுக்கிழமை வந்தது.

உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை தனது நாட்டுடன் இணைக்கும் முயற்சியில் ரஷியா ஈடுபட்டுள்ள நிலையில், லைமன் நகரத்தின் மீதான கட்டுப்பாட்டை இழந்தது ரஷியாவுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

ரஷியாவுடன் இணைக்கப்பட்ட பிராந்தியங்களில் ஒன்றான டொனட்ஸ்க் பிராந்தியத்தில், லுஹான்ஸ்க் பிராந்தியத்துடனான எல்லையில் இந்த நகரம் அமைந்துள்ளது. ரஷியாவின் தரைவழிப் போக்குவரத்து மற்றும் தகவல் பரிமாற்றத்துக்கு இணைப்பு மையமாக இந்நகரம் செயல்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷிய படைகள் சனிக்கிழமை லைமன் நகரத்தில் இருந்து பின்வாங்கிய நிலையில், உக்ரைன் படைகளின் கட்டுப்பாட்டுக்குள் அந்த நகரம் கொண்டுவரப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT