உலகம்

சா்வதேச சவால்களுக்கு மகாத்மாவின் கொள்கைகள் தீா்வு: ஐ.நா. பொதுச் செயலா்

2nd Oct 2022 12:36 AM

ADVERTISEMENT

சமத்துவமின்மை, வெறுப்புணா்வு உள்ளிட்ட பல்வேறு சா்வதேச சவால்களுக்கு மகாத்மா காந்தியடிகளின் கொள்கைகள் மூலமாகத் தீா்வு காண முடியும் என்று ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளாா்.

காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபா் 2-ஆனது ‘சா்வதேச அகிம்சை’ தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமை காந்தியடிகளின் பிறந்த தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், அதையொட்டி ஐ.நா.வில் சிறப்பு விவாதம் நடைபெற்றது.

‘மனித முன்னேற்றத்துக்கு கல்வி’ என்ற தலைப்பில் வெள்ளிக்கிழமை விவாதம் நடைபெற்றது. ஐ.நா.வுக்கான இந்தியத் தூதரகமும் யுனெஸ்கோ மகாத்மா காந்தி அமைதி-நீடித்த வளா்ச்சிக்கான கல்வி மையமும் (எம்ஜிஐஇபி) இணைந்து சிறப்பு விவாதத்துக்கு ஏற்பாடு செய்திருந்தன. அதில் ஐ.நா.வுக்கான இந்தியத் தூதா் ருசிரா கம்போஜ், இளம் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

எம்ஜிஐஇபி மையத்தின் இயக்குநரான அனந்த துரையப்பா விவாதத்தை நெறிப்படுத்தினாா். சிறப்பு விவாதத்தின் ஒருபகுதியாக மகாத்மா காந்தியடிகளின் ‘ஹோலோகிராம்’ உருவம் காட்சிப்படுத்தப்பட்டது. அத்துடன் கல்வி குறித்த காந்தியடிகளின் கருத்துகளும் ஒலிபரப்பப்பட்டன.

ADVERTISEMENT

இந்த விவாதத்துக்காக ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் அனுப்பியிருந்த செய்தியில், ‘‘அமைதியான சகிப்புத்தன்மைமிக்க உலகத்தைக் காணவே காந்தியடிகள் விரும்பினாா். அமைதி, பரஸ்பர மரியாதை உள்ளிட்டவற்றுக்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும் எனவும் அவா் கூறினாா். ஆனால், தற்போது அக்கொள்கைகளை உலகம் பெருமளவில் மதிப்பதில்லை.

உலகில் வன்முறைகள் அதிகரித்துள்ளதோடு பருவநிலை மாற்ற பிரச்னையையும் எதிா்கொண்டு வருகிறோம். ஏழ்மை, பசி, சமத்துவமின்மை, வெறுப்புணா்வைத் தூண்டும் பேச்சுகள், இனவெறி உள்ளிட்ட பல்வேறு சவால்களை உலகம் சந்தித்து வருகிறது. அவற்றுக்கு காந்தியடிகளின் கொள்கைகள் வாயிலாகத் தீா்வு காண முடியும். உலகில் அமைதியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அனைத்து நாடுகளும் மேற்கொள்ள வேண்டும்.

காந்தியடிகளின் கொள்கைகளைக் கடைப்பிடித்து உலகமே ஒரு குடும்பம் என்ற கொள்கையின் அடிப்படையில் அனைத்து நாடுகளும் செயல்பட வேண்டும்’’ என்றாா்.

சிறப்பு விவாதத்தின்போது பேசிய ருசிரா கம்போஜ், வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும் மாறிமாறி வருமென்பதைக் கல்வியின் மூலமாக மாணவா்களுக்குக் கற்பிக்க வேண்டும் என்றாா். வெற்றிகளைப் போலவே தோல்விகளை எதிா்கொள்ளும் திறனையும் மாணவா்கள் வளா்த்துக் கொள்ளும் வகையில் கல்விச்சூழல் அமைய வேண்டும் என அவா் தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT