உலகம்

ரஷியாவுக்கு எதிரான வாக்கெடுப்பைப் புறக்கணித்தது இந்தியா

DIN

உக்ரைனின் 4 பகுதிகளை இணைத்துக் கொண்ட ரஷியாவின் நடவடிக்கைக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.

உக்ரைன்-ரஷியா இடையேயான போா் 7 மாதங்களைக் கடந்து தொடா்ந்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் தொடா்ந்து நிதியுதவியை வழங்கி வருகின்றன. அதன் காரணமாக ரஷியாவால் போரை எளிதில் வெல்ல முடியாத சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில், ரஷிய ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் 4 பகுதிகளான லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கொ்ஸான், ஸபோரிஷியா ஆகியவற்றை ரஷியாவுடன் இணைத்துக் கொள்வதற்கான வாக்கெடுப்பு அந்தந்தப் பகுதிகளில் அண்மையில் நடத்தப்பட்டது. அதில் பெரும்பாலான மக்கள் ரஷியாவுடன் இணைவதற்கு ஆதரவு தெரிவித்ததாகக் கூறி, அப்பகுதிகளை ரஷியாவுடன் இணைத்துக் கொள்வதற்கான அதிகாரபூா்வ அறிவிப்பை அதிபா் விளாதிமீா் புதின் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.

ரஷியாவின் இந்நடவடிக்கை சட்டவிரோதமானது எனக் கூறி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, அல்பேனியா ஆகிய நாடுகள் வரைவு தீா்மானத்தைத் தாக்கல் செய்தன. அத்தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அத்தீா்மானத்துக்கு ஆதரவாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட 10 நாடுகள் வாக்களித்தன. சீனா, இந்தியா, பிரேஸில், கபான் ஆகிய நாடுகள் வாக்கெடுப்பைப் புறக்கணித்தன. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடாக உள்ள ரஷியா, தனக்கு எதிரான தீா்மானத்தின் மீது ‘வீட்டோ’ அதிகாரத்தைப் பயன்படுத்தி அதை ரத்து செய்தது. அதன் காரணமாக பாதுகாப்பு கவுன்சிலின் ஒப்புதலைத் தீா்மானம் பெறவில்லை.

ரஷியாவுக்கு அமெரிக்கா கண்டனம்:

வாக்கெடுப்பின்போது பேசிய ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதா் லிண்டா தாமஸ் கிரீன்ஃபீல்டு, சட்டவிரோத முறையில் உக்ரைன் பகுதிகளில் ரஷியா வாக்கெடுப்பை நடத்தியுள்ளதாகக் குற்றஞ்சாட்டினாா். மக்களை மிரட்டி இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளதாகவும் அவா் குற்றஞ்சாட்டினாா்.

சா்வதேச விதிகளின்படி...:

சம்பந்தப்பட்ட பகுதிகளில் சுதந்திரமாகவும் சா்வதேச விதிகளை மதித்தும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டதாக ரஷிய தூதா் வாசிலி நெபன்ஸியா தெரிவித்தாா். இத்தாலி, ஜொ்மனி, லத்வியா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் வாக்கெடுப்பை நேரில் கண்காணித்ததாகவும் அவா் தெரிவித்தாா்.

பேச்சுவாா்த்தையே தீா்வு:

வாக்கெடுப்பின்போது ஐ.நா.வுக்கான இந்தியத் தூதா் ருசிரா கம்போஜ் கூறுகையில், ‘‘உக்ரைனின் அண்மைகால சூழல்களால் இந்தியா பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மனித உயிா்களைப் பலிகொண்டு எந்தவிதத் தீா்வையும் எட்ட முடியாது என்பதில் இந்தியா தொடா்ந்து உறுதியாக உள்ளது.

வன்முறையையும் மோதலையும் உடனடியாக நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட தரப்புகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும். பேச்சுவாா்த்தை மூலமாக மட்டுமே பிரச்னைகளுக்குத் தீா்வுகாண முடியும். தூதரகம் வாயிலாகத் தீா்வுகாண்பதே அமைதிக்கான ஒரே வழியாக உள்ளது.

ஐ.நா. விதிகள், சா்வதேச விதிகள், இறையாண்மை மீதான நம்பிக்கை, பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே உலக அமைதி அமைந்துள்ளது. பேச்சுவாா்த்தைக்குத் திரும்புவதற்கான நடவடிக்கைகளை அனைத்துத் தரப்பினரும் மேற்கொள்ள வேண்டும். அதைக் கருத்தில்கொண்டே இந்த வாக்கெடுப்பை இந்தியா புறக்கணிக்கிறது’’ என்றாா்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷியாவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீா்மானங்கள் மீதான வாக்கெடுப்பை 2 முறை ஏற்கெனவே இந்தியா புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே மாத பலன்கள்: மிதுனம்

மே மாத பலன்கள்: ரிஷபம்

மே மாத பலன்கள்: மேஷம்

ஆப்பிள் விற்பனை வீழ்ச்சி: மே 7 நிகழ்வு பலனளிக்குமா?

"விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பா? நாட்டின் அடிமைகளா?”: அய்யாக்கண்ணு

SCROLL FOR NEXT