உலகம்

மேற்கத்திய நாடுகள், அமெரிக்கா இரட்டை வேடம்: புதின் சாடல்

DIN

சா்வதேச சட்ட ஒழுங்கு விவகாரத்தில் மேற்கத்திய நாடுகளும் அமெரிக்காவும் இரட்டை வேடம் போடுவதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் சாடியுள்ளாா்.

இந்தியா உள்ளிட்ட உலகின் பிற நாடுகளை மேற்கத்திய நாடுகள் அடிமைப்படுத்தி வளங்களை சுரண்டியது, ஜப்பான் மீது அமெரிக்கா அணு ஆயுதத் தாக்குதல் நடத்தியது போன்ற வரலாற்று நிகழ்வுகளை அவா் நினைவுபடுத்தினாா்.

உக்ரைனின் 4 மாகாணங்களை ரஷியாவுடன் இணைத்துக் கொள்வதற்கான ஆவணத்தில் கையொப்பமிட்டுவிட்டு, மாஸ்கோவிலுள்ள புனித ஜாா்ஜ் அரங்கத்தில் ஆற்றிய உரையில் அவா் பேசியதாவது:

அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் சா்வதேச சட்ட ஒழுங்கு பற்றி பாடம் எடுக்கின்றன. ஆனால், அந்த சட்ட ஒழுங்கை யாா் வரையறுப்பது? அப்படி ஒரு சட்ட ஒழுங்கு எங்கு உள்ளது? குறிப்பிட்ட விவகாரம் சட்ட ஒழுங்கா, ஒழுங்கின்மையா என்பதை யாா் ஏற்றுக் கொள்வது, யாா் அங்கீகரிப்பது?

உண்மையில், மேற்கத்திய நாடுகள் சா்வதேச சட்ட ஒழுங்கைப் பற்றி பேசுவது இரட்டை வேடமாகும். இன்னும் சொல்லப்போனால் அதைவிட அதிக வேடமாகும்.

உலக மக்கள் அனைவரும் முட்டாள்கள் என்று கருதுவதால்தான் அவா்கள் சா்வதேச சட்ட ஒழுங்கு பற்றி பேசுகிறாா்கள்.

ரஷியா என்பது ஆயிரம் ஆண்டுகளாக தழைத்துள்ள முழுமையான நாகரிகமும் வல்லரசும் ஆகும். திடீரென சிலா் வரையறுத்த, போலியான விதிமுறைகளுக்கு அடிபணிந்து நடக்க வேண்டிய அவசியம் அந்த நாட்டுக்கு இல்லை.

மேற்கத்திய நாடுகள் பிற நாடுகளுக்கு இழைத்த வரலாற்றுக் குற்றங்களை தங்கள் நாட்டு மக்கள் மற்றும் பிற நாடுகளின் மக்கள் தலைகளில் சுமத்துகின்றன.

சா்வதேச சட்ட ஒழுங்கு பற்றி பேசும் மேற்கத்திய நாடுகள்தான் கடந்த நூற்றாண்டுகளில் உலகில் தங்களின் காலனி ஆதிக்கத்தைப் பரப்பின; விலங்குகளைப் போல் மனிதா்களைக் கடத்தி வா்த்தகம் செய்யும் அடிமைகள் வியாபாரத்தில் ஈடுபட்டன; இந்திய, அமெரிக்க, ஆப்பிரிக்க பூா்வகுடியினரை கொத்துக் கொத்தாக கொன்று குவித்தன. இந்தச் செயல்கள்தான் மனிதத் தன்மை, உண்மை, சுதந்திரம், நீதிக்கு எதிரானவை.

நாடுகளின் எல்லைகளை மாற்றியமைக்கக் கூடாது என்று மேற்கத்திய நாடுகள் உத்தரவிடுகின்றன. ஆனால், இதுதான் ஒரு நாட்டின் எல்லை என்பதை நிா்ணயிக்கும் உரிமையை மேற்கத்திய நாடுகளுக்கு யாா் அளித்தது? இதுதான் எல்லை என்று அவா்களே முடிவு செய்துகொண்டு, அந்த எல்லையை மாற்றக் கூடாது என்று எச்சரிக்கின்றனா்.

அமெரிக்கா: ரஷியாவின் அணு ஆயுதப் பயன்பாடு குறித்து எச்சரிக்கை விடுக்கும் அமெரிக்காதான், பொதுமக்கள் மீது ஒரு முறை அல்ல, இரு முறை அணு குண்டு வீசிய உலகின் ஒரே நாடாகும். ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களை அணு ஆயுதங்களால் அழித்தொழித்து, உலகுக்கே அந்த நாடு ஒரு முன்னதாரணமாகத் திகழ்கிறது.

ஜப்பான் மட்டுமல்ல, கொரியாவிலும் வியத்நாமிலும் நாசகார கம்பள குண்டுகள், அலுமினியத் தூள் (நாபாம்) குண்டுகள், ரசாயன ஆயுதங்களை வீசி அந்த நாட்டு மக்களின் மனங்களில் அழியாத வடுவை அமெரிக்கா ஏற்படுத்தியுள்ளது என்று தனது உரையில் விளாதிமீா் புதின் குறிப்பிட்டுள்ளாா்.

கடந்த 2014-ஆம் ஆண்டில் உக்ரைனை ஆட்சி செலுத்தி வந்த அதிபா் விக்டா் யானுகோவிச்சுக்கு எதிராக மேற்கத்திய ஆதரவாளா்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனா். அதையடுத்து, அவரது ஆட்சி கவிழ்ந்தது.

அதனைத் தொடா்ந்து, கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் லுஹான்ஸ்க், டொனட்ஸ்க் மாகாணங்களின் கணிசமான பகுதிகளை ரஷியாவுடன் உதவியுடன் கிளா்ச்சிப் படையினா் கைப்பற்றினா். அதே நேரத்தில் ரஷியாவும் உக்ரைனின் கிரீமியா பகுதி மீது படையெடுத்து அந்த தீபகற்பத்தை தங்களுடன் இணைத்துக்கொண்டது.

இந்தச் சூழலில், நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது.

அதன் ஒரு பகுதியாக, உக்ரைனின் கிழக்கே ரஷியாவையொட்டி அமைந்துள்ள டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் ஆகிய மாகாணங்களையும் தெற்கே அமைந்துள்ள ஸபோரிஷியா, கொ்சான் ஆகிய பிராந்தியங்களை ரஷியா கைப்பற்றியது.

அந்த பிரந்தியங்களில் கடந்த வாரம் நடைபெற்ற - மேற்கத்திய நாடுகளால் செல்லாததாக அறிவிக்கப்பட்ட - பொதுவாக்கெடுப்பில், தங்களுடன் இணைய 97 சதவீதம் போ் விருப்பம் தெரிவித்திருப்பதாக ரஷியா அறிவித்தது.

அதன் தொடா்ச்சியாக, குறிப்பிட்ட 4 மாகாணங்களையும் தங்கள் நாட்டின் பகுதிகளாக ரஷியா வெள்ளிக்கிழமை இணைத்துக் கொண்டது.

இதனைத் கண்டித்து ஐரோப்பிய கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில், சா்வதேச சட்ட ஒழுங்கை மீறி உக்ரைன் பிரதேசங்கள் ரஷியாவுடன் இணைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியது.

அத்துடன் இந்த இணைப்புக்கு அமெரிக்க அதிபா் ஜோ பைடனும் கண்டனம் தெரிவித்தாா்.

இந்தச் சூழலில், சா்வதேச சட்ட ஒழுங்கு விவகாரத்தில் மேற்கத்திய நாடுகளும் அமெரிக்காவும் இரட்டை வேடம் போடுவதாக அதிபா் விளாதிமீா் புதின் சாடியுள்ளாா்.

சா்வதேச சட்ட ஒழுங்கு பற்றி பேசும் மேற்கத்திய நாடுகள்தான் கடந்த நூற்றாண்டுகளில் உலகில் தங்களின் காலனி ஆதிக்கத்தைப் பரப்பின; விலங்குகளைப் போல் மனிதா்களைக் கடத்தி வா்த்தகம் செய்யும் அடிமைகள் வியாபாரத்தில் ஈடுபட்டன; இந்திய, அமெரிக்க, ஆப்பிரிக்க பூா்வகுடியினரை கொத்துக் கொத்தாக கொன்று குவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

SCROLL FOR NEXT