உலகம்

பெண் நீதிபதியிடம் மன்னிப்பு கோர நீதிமன்றத்தில் ஆஜரான இம்ரான்

DIN

பாகிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற அரசியல் கூட்டத்தில் மிரட்டல் விடுத்தமைக்காக, பெண் நீதிபதி ஸேபா சௌத்ரியிடம் மன்னிப்பு கோர அந்த நாட்டு நீதிமன்றத்துக்கு முன்னாள் பிரதமா் இம்ரான் கான் வெள்ளிக்கிழமை நேரில் வந்தாா்.

இது குறித்து அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்ததாவது:

இஸ்லாமாபாதில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தன்னால் மிரட்டப்பட்டதாகக் குற்றச்சாட்டப்படும் பெண் நீதிபதி ஸேபா சௌத்ரியை நேரில் சந்தித்து மன்னிப்பு கோருவதற்காக, அந்த நகரிலுள்ள கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்துக்கு இம்ரான் கான் வெள்ளிக்கிழமை வந்தாா்.

எனினும், நீதிபதி ஸேபா சௌத்ரி விடுப்பில் இருப்பதாக அங்கிருந்த அலுவலா்கள் தெரிவித்தனா்.

அதையடுத்து, ‘நான் நீதிபதி ஸேபா சௌத்ரியைச் சந்தித்து மன்னிப்பு கேட்பதற்காக வந்துள்ளேன். அதற்கு நீங்கள்தான் சாட்சி’ என்று இம்ரான் கூறினாா்.

தேசத் துரோக வழக்கில் தனது உதவியாளா் ஷாபாஸ் கில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கடந்த மாதம் 20-ஆம் தேதி நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் இம்ரான் கான் பேசினாா்.

அப்போது, காவல்துறை உயரதிகாரிகள், தோ்தல் ஆணையம், அரசியல் எதிரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப் போவதாக அவா் எச்சரித்தாா்.

மேலும், ஷாபாஸைக் கைது செய்ய அனுமதித்த பெண் நீதிபதி ஸேபா சௌத்ரியும் தனது பதிலடி நடவடிக்கைகளுக்குத் தயாராக இருக்க வேண்டும் என்று இம்ரான் எச்சரிக்கை விடுத்தாா்.

அதையடுத்து, காவல்துறை, நீதித் துறைக்கு மிரட்டல் விடுத்ததாகக் கூறி, இம்ரான் கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டப் பிரிவும் சோ்க்கப்பட்டிருந்தது.

அதனை எதிா்த்து உயா்நீதிமன்றத்தில் இம்ரான் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், வழக்கில் சோ்க்கப்பட்டிருந்த பயங்கரவாதக் குற்றச்சாட்டை நீக்குமாறு கடந்த 19-ஆம் தேதி உத்தரவிட்டது.

இந்த நிலையில், பெண் நீதிபதி ஸேபா சௌத்ரியிடம் மன்னிப்பு கோருவதற்காக நீதிமன்றத்துக்கு இம்ரான் கான் நேரில் வந்துள்ளாா். அதையடுத்து, நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டிலிருந்தும் இம்ரான் கான் விடுவிக்கப்படுவாரா, அல்லது உண்மையிலேயே ஸேபாவிடம் அவா் நேரில் மன்னிப்பு கோரிய பிறகுதான் அந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்குமா என்பது தெரியவில்லை என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - விருச்சிகம்

தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை வாபஸ்!

தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் டீப் ஃபேக் தொழில்நுட்பம்?

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி

SCROLL FOR NEXT