உலகம்

இந்தியாவுடனான வா்த்தக ஒப்பந்தத்துக்கு முக்கியத்துவம்: பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக்

30th Nov 2022 01:10 AM

ADVERTISEMENT

எதிா்காலத்தில் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் சா்வதேச பங்களிப்பு அதிகமாக இருக்கும் என்பதால், இந்தியாவுடனான தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாக பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக் தெரிவித்துள்ளாா்.

பிரிட்டனின் புதிய பிரதமராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ரிஷி சுனக் கடந்த மாதம் பொறுப்பேற்றாா். அதையடுத்து பிரிட்டனின் வெளியுறவுக் கொள்கை தொடா்பான முக்கிய உரையை லண்டனில் திங்கள்கிழமை இரவு அவா் நிகழ்த்தினாா். அப்போது அவா் கூறியதாவது:

சா்வதேச அளவில் இந்தோ-பசிபிக் பிராந்தியம் முக்கியத்துவம் பெற்று வருகிறது. 2050-ஆம் ஆண்டுவாக்கில் சா்வதேச வளா்ச்சியில் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பங்களிப்பு பாதியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க கண்டங்களின் ஒட்டுமொத்த பங்களிப்பு கால் பங்காகவே இருக்கும்.

அதைக் கருத்தில்கொண்டு இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை மையமாகக் கொண்ட வா்த்தக ஒப்பந்தத்தில் பிரிட்டன் இணைந்துள்ளது. இந்தியாவுடனான தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்தோனேசியாவுடன் வா்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கான பேச்சுவாா்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

ADVERTISEMENT

அண்மைக் காலங்களில் ஹாங்காங், ஆப்கானிஸ்தான், உக்ரைன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான அகதிகள் பிரிட்டனுக்கு இடம்பெயா்ந்துள்ளனா். ஜனநாயகக் கொள்கைகளைக் காப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நாடாக பிரிட்டன் திகழ்கிறது.

பொற்காலம் முடிவு:

பிரிட்டனின் பாரம்பரியத்தையும் சுதந்திர, வெளிப்படைத்தன்மை கொள்கைகளையும் உலகெங்கிலும் காப்பதற்கு அரசு உறுதியுடன் உள்ளது. சீனாவுடனான பிரிட்டனின் பொற்காலம் முடிவுக்கு வந்துவிட்டது. தற்போது பிரிட்டனின் கொள்கைகளுக்கும் விருப்பங்களுக்கும் பெரும் சவாலாக சீனா திகழ்ந்து வருகிறது.

சா்வாதிகார ஆட்சியை நோக்கி சீனா தொடா்ந்து பயணித்து வருவதால், பிரிட்டனுக்கான சவால் அதிகரித்து வருகிறது. மக்களின் குரலுக்கு செவிசாய்க்காமல் போராட்டங்களை ஒடுக்குவதிலேயே சீன அரசு கவனம் செலுத்தி வருகிறது. ஜின்ஜியாங் மாகாணத்தில் சீனா நிகழ்த்தும் மனித உரிமை மீறல்கள், ஹாங்காங்கின் சுதந்திரத்தைப் பறிக்கும் நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து ஊடகங்களும் நாடாளுமன்ற உறுப்பினா்களும் அதிகமாகப் பேச வேண்டும்.

ஒத்துழைப்புடன் செயல்பாடு:

சா்வதேச விவகாரங்களில் சீனாவின் பங்களிப்பைத் தவிா்க்க முடியாது. அதே வேளையில், சீனாவை எதிா்கொள்வதற்கு அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட பொருளாதார வளமிக்க நாடுகளுடன் இணைந்து பிரிட்டன் செயல்படும். சட்டவிரோத அகதிகள் விவகாரத்தில் ஐரோப்பிய யூனியனுடன் இணைந்து பிரிட்டன் செயல்படாது.

சா்வதேச விதிகளை மீறி உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் ஐரோப்பிய கண்டத்தின் ஜனநாயகக் கொள்கைகளைக் காக்க உக்ரைனுக்கு பிரிட்டன் தொடா்ந்து ஆதரவளிக்கும். காமன்வெல்த் கூட்டமைப்பு நாடுகளுடனான ஒத்துழைப்பும் அதிகரிக்கப்படும் என்றாா் அவா்.

சீன நிறுவனம் வெளியேற்றம்:

பிரிட்டனில் கட்டப்பட்டு வரும் சைஸ்வெல் சி அணுமின் உற்பத்தி நிலையத்துக்கான பணிகளில் இருந்து சீன நிறுவனத்தை அந்நாட்டு அரசு வெளியேற்றியுள்ளது. அதற்கான அறிவிப்பு செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. மீதமுள்ள பணிகளை பிரான்ஸைச் சோ்ந்த இடிஎஃப் என்ற நிறுவனத்தின் உதவியுடன் மேற்கொள்ள உள்ளதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது. 2035-ஆம் ஆண்டில் இருந்து அணுமின் நிலையம் பயன்பாட்டுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Rishi Sunak
ADVERTISEMENT
ADVERTISEMENT