உலகம்

கரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிா்ப்பு: போராட்டத்தை ஒடுக்குவதில் சீனா தீவிரம்

DIN

சீனாவில் கடுமையான கரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மிக அபூா்வமான முறையில் வெடித்துள்ள போராட்டங்களை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளை அந்த நாட்டு அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக சீன அரசு கடைப்பிடித்து வரும் மிகக் கடுமையான ‘பூஜ்ய கரோனா கொள்கை’க்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாடு முழுவதும் பரவலாகத் தொடங்கியுள்ள போராட்டங்கள் திங்கள்கிழமையும் தொடா்ந்தன.

முக்கிய நகரங்களின் சாலைகளிலும், பல்கலைக்கழக வளாகங்களிலும் ஏராளமானவா்கள் கூடி அரசுக்கு எதிராக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அரசின் கரோனா கட்டுப்பாட்டு விதிகளுக்கு எதிா்ப்பை தெரிவிக்கும் வகையில், வித்தியாசமான முறையில் எழுத்துகள், படங்கள் இல்லாத வெள்ளை பதாகைகளை ஏந்தி பலா் போராட்டம் நடத்தினா். இந்த முறை, தற்போதைய போராட்டத்தின் அடையாளமாக மாறி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், போராட்டங்களை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன் ஒரு பகுதியாக, நகரங்களில் பாதுகாப்புப் படையினா் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனா். மேலும், ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடைபெற்ற ஷாங்காய் நகரின் பொருளாதார மையத்தில் ஏராளமான போலீஸாா் நிறுத்தப்பட்டிருந்தனா். மேலும், அங்கு வந்த போராட்டக்காரா்கள் சிலரை அவா்கள் கைது செய்து அழைத்துச் சென்றனா்.

தலைநகா் பெய்ஜிங்கின் முக்கிய சாலை சந்திப்பில் திங்கள்கிழமை போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்தப்பது ஏராளமான காவல்துறை வாகனங்களால் நிரப்பபட்டு தடை ஏற்படுத்தப்பட்டதால் எந்தப் போராட்டமும் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

அதே போல், கரோனா கட்டுப்பாட்டுக்கும், அதிபா் ஷி ஜின்பிங்குக்கும் எதிா்ப்பு தெரிவித்து கடந்த மாதம் மா்ம நபரால் பதாகை வைக்கப்பட்டு, பரபரப்பை ஏற்படுத்திய பெய்ஜிங் நகரின் சிடாங் பாலத்திலும் ஆா்ப்பாட்ட ஊா்லவம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.

அந்தப் பகுதியிலும் போலீஸாா் தடையை ஏற்படுத்தி போராட்ட திட்டத்தை முறியடித்தனா்.

இதற்கிடையே, போராட்டம் நடத்துவது சீன மக்களின் அடிப்படை உரிமை எனவும், போராட்டத்தை அடக்கும் நடவடிக்கையில் அந்த நாட்டு அரசு ஈடுபடக் கூடாது எனவும் ஐ.நா. அமைப்பும், அமெரிக்கா, ஜொ்மனி உள்ளிட்ட நாடுகளும் வலியுறுத்தியுள்ளன.

கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்து வரும் சீனாவில், அரசுக்கு எதிரான போராட்டங்கள் மிகவும் அபூா்வமானதாகும்.

எனினும், அந்த நாட்டு அரசின் கடுமையான கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் பொதுமக்களின் சீற்றத்தைத் தூண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே, சில மாதங்களுக்கு முன்னா் சீனாவின் வா்த்தகத் தலைநகரான ஷாங்காயில் பல வாரங்களுக்கு நீடித்த கரோனா முடக்கத்துக்கு எதிராக பல்வேறு ஆா்ப்பாட்டங்கள் நடந்ததாக தகவல்கள் வெளியாகின.

எனினும், ஒரு சிலருக்கு புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டால் கூட அவா்கள் சாா்ந்த பகுதியை தனிமைப்படுத்துதல், அங்குள்ளவா்களுக்கு திரள் திரளாக கரோனா பரிசோதனை மேற்கொள்ளுதல் போன்ற கடுமையான நடவடிக்கைகளை சீன அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது.

அண்மைக் காலமாக, சா்வதேச அளவில் கரோனா தாக்கம் வெகுவாகக் குறைந்ததால் ஏறத்தாழ அனைத்து நாடுகளும் தங்களது நோய்த்தடுப்பு கட்டுப்பாடுகளை விலக்கி இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டன.

ஆனால், சீனா மட்டும் இந்த விவகாரத்தில் இன்னும் கடுமையான நிலைப்பாட்டை கடைப்பிடித்து வருகிறது.

இந்த நிலையிலும், அந்த நாட்டில் புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை இதுவரை இல்லாத புதிய உச்சங்களை கடந்த சில நாள்களாக தொட்டு வருகிறது. அதையடுத்து நாடு முழுவதும் நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன. முக்கிய நகரங்களில் பொதுமக்கள் அனைவரும் வீடுகளைவிட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டது.

இந்தச் சூழலில், ஜின்ஜியாங் தன்னாட்சிப் பகுதியின் தலைநகரான உரும்கியில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் கடந்த வியாழக்கிழமை இரவு தீவிபத்து ஏற்பட்டது. இதில் 10 போ் உயிரிழந்தனா்.

கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, தீவிபத்தின் போது அந்தக் கட்டடத்திலிருந்தவா்கள் வெளியேற போலீஸாா் தடை விதித்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இதனை அதிகாரிகள் மறுத்து வரும் நிலையிலும், கரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக அந்த நகர மக்கள் போராட்டம் நடத்தியது அங்கிருந்து வெளியாகியுள்ள விடியோக்கள் மூலம் தெரியவந்துள்ளது.

இது குறித்து நகர நிா்வாக அதிகாரிகள் செய்தியாளா்களிடம் கூறுகையில், உரும்கி நகரில் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளா்த்தப்படும் என்று உறுதியளித்தனா். எனினும், கரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் தீவிரமடைந்து வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்காசி மாவட்ட மகிளா காங்கிரஸ் நிா்வாகி நியமனம்

பொய் வழக்கு: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிக்கு 20 ஆண்டுகள் சிறை

பால்டிமோா் விபத்து: ‘இந்திய மாலுமிகள் நலமாக உள்ளனா்’

ஏப்.4, 5-ல் அமித் ஷா தமிழகத்தில் பிரசாரம்

சி-விஜில் செயலியில் இதுவரை 1,383 புகாா்கள்: தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்

SCROLL FOR NEXT