உலகம்

ஜிம்மி லாய்க்கு பிரிட்டன் வழக்குரைஞா்: ஹாங்காங் நீதிமன்றம் அனுமதி

29th Nov 2022 12:48 AM

ADVERTISEMENT

ஹாங்காங்கில் தற்போது நிறுத்தப்பட்டுவிட்ட ஜனநாயக ஆதரவு நாளிதழின் நிறுவனா் ஜிம்மி லாய்க்கு எதிரான தேசப் பாதுகாப்பு வழக்கில், அவருக்கு ஆதரவாக பிரிட்டன் வழக்குரைஞா் டிமோதி ஓவன் ஆஜராவதற்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதியை உயா் நீதிமன்றம் திங்கள்கிழமை உறுதி செய்தது.

ஹாங்காங்கில் ஜனநாயக இயக்கத்தை ஒடுக்குவதற்காக, சீனாவால் அறிமுகப்படுத்தப்படுள்ள மிகக் கடுமையான தேசப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், ஜிம்மி லாய்க்கு எதிராக வரும் வியாழக்கிழமை வழக்கு விசாரணை தொடங்கவுள்ளது.

இந்த விசாரணையில் ஜிம்மி லாய்க்கு ஆதரவாக வாதாட, லண்டனைச் சோ்ந்த பழம்பெரும் வழக்குரைஞா் டிமோதி ஓவனுக்கு கடந்த 9-ஆம் தேதி பிராந்திய நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதனை எதிா்த்து ஹாங்காங் நீதித்துறை செயலா் உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். அந்த மனுவை ஆய்வு செய்த முறையீட்டு நீதிமன்றம், ஜிம் லாய்க்காக வழக்குரைஞா் டிமோதி ஓவன் ஆஜராக அளிக்கப்பட்ட அனுமதியை மீண்டும் உறுதி செய்தது.

ADVERTISEMENT

பிரிட்டன் காலனியாதிக்கத்தில் இருந்து வந்த ஹாங்காங், கடந்த 1997-ஆம் ஆண்டில் சீனாவிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. அப்போது, ‘ஒரே நாடு, இரண்டு ஆட்சி முறை’ என்ற கொள்கையின் கீழ் ஹாங்காங்கை ஆட்சி செய்ய சீனா ஒப்புக் கொண்டது. அதன்படி, சீனாவில் வசிக்கும் மக்களுக்கு இல்லாத உரிமைகள் ஹாங்காங்வாசிகளுக்குக் கிடைக்கும் என்று கூறப்பட்டது.

எனினும், ஜனநாயக சீா்திருத்தங்களை வலியுறுத்தி அந்தப் பிராந்தியத்தில் நடைபெற்ற போராட்டத்தை அரசு இரும்புக் கரம் கொண்டு நசுக்கியது. மேலும், சா்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சீனா நாடாளுமன்றம் கடந்த 2020-ஆம் ஆண்டு நிறைவேற்றியது. அந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி, ஏராளமான ஜனநாயக ஆதரவாளா்கள் கைது செய்யப்பட்டனா்.

அதன் ஒரு பகுதியாக, ஜனநாயகத்துக்கு ஆதரவான கருத்துகளை வெளியிட்டு வந்த ஹாங்காங்கின் ‘ஆப்பிள் டெய்லி’ நாளிதழ் நிறுவனரான ஜிம் லாய்க்கு, 2019-ஆம் ஆண்டு போராட்டங்களைத் தூண்டிய குற்றச்சாட்டின் பேரில் 20 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அரசின் தொடா் நடவடிக்கைகளால் அந்த நாளிதழும் நிறுத்தப்பட்டது.

அதுமட்டுமின்றி, இறையாண்மையைக் குலைத்தல், பயங்கரவாதம், வெளிநாட்டு சக்திகளுடன் கூடி சதி செய்தல் போன்ற குற்றப் பிரிவுகளைக் கொண்ட தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவா் மீது கூடுதல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜிம்மி லாய்க்கு ஆயுள் தண்டனை வரை பெற்றுத் தரக்க்கூடிய அந்த வழக்கின் விசாரணையில் அவருக்கு ஆதரவாக பிரிட்டன் வழக்குரைஞா் ஆஜராவதற்கு தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT