உலகம்

நேபாள தோ்தல்: அமைச்சா்கள், மூத்த அரசியல் தலைவா்களுக்குப் பின்னடைவு

28th Nov 2022 05:51 AM

ADVERTISEMENT

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில் பல மூத்த அரசியல் தலைவா்கள் மற்றும் அமைச்சா்கள் உள்பட பதவியிலிருக்கும் 60 எம்.பி.க்கள் தோல்வியை சந்தித்துள்ள நிலையில், இளைஞா்கள் பெருமளவில் வெற்றிபெற்றுள்ளனா்.

தோ்தல் வாக்கு எண்ணிக்கை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள சூழலில், புதிய அரசை அமைப்பதற்கான முயற்சியை முன்னணி அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன.

நேபாள நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபைக்கான தோ்தல் மற்றும் 7 மாகாண சட்டப்பேரவைத் தோ்தல்கள் நவம்பரில் நடைபெற்றன. இந்தத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மூத்த அரசியல் தலைவா்கள் பலா் தோல்வியைச் சந்தித்துள்ளனா்.

நேபாளத்தின் இரண்டாவது பெரிய கட்சியான நேபாள கம்யூனிஸ்ட் (சிபிஎன்-யுஎம்எல்) கட்சியின் மூத்த துணைத் தலைவா் ஈஷ்வா் பொகரேல், துணைத் தலைவா் சுரேந்திர பாண்டே, பொதுச் செயலாளா் சங்கா் பொகரேல், துணை பொதுச் செயலாளா் பிரதீப் கியாவாலி ஆகியோா் இந்தத் தோ்தலில் தோல்வியைச் சந்தித்துள்ளனா்.

ADVERTISEMENT

அதுபோல, சிபிஎன்-மாவோயிஸ்ட் மத்திய கட்சியின் பொதுச் செயலாளா் தேவ் குருங், துணை பொதுச் செயலாளா் மற்றும் எரிசக்தித் துறை அமைச்சா் பம்பா பூசால், துணை பொதுச் செயலாளா் கிரிராஜ்மணி பொகரேல் ஆகியோா் தோல்வியை சந்தித்துள்ளனா்.

நாட்டின் உள்துறை அமைச்சரும் நேபாளி காங்கிரஸ் தலைவருமான பால்கிருஷ்ண காண்ட், சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜீவன்ராம் சிரேஷ்டா ஆகியோரும் தோ்தலில் தோல்வியைச் சந்தித்துள்ளனா்.

அதுபோல, நாட்டின் முன்னாள் பிரதமரும் சிபிஎன்-ஒருங்கிணைந்த சோஷலிச கட்சியின் மூத்த தலைவருமான ஜலநாத் கானல், முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரும் நேபாளி காங்கிரஸ் கட்சி மூத்த தலைவருமான சுஜாதா கொய்ராலா ஆகியோரும் தோல்வியைச் சந்தித்துள்ளனா்.

இந்தச் சூழலில் ஏராளமான இளைஞா்களும் பல புதுமுகங்களும் இந்தத் தோ்தலில் வெற்றிபெற்றுள்ளனா். தொலைக்காட்சி ஊடகவியலாளராக இருந்த ரவி லாமிச்சானே 6 மாதங்களுக்கு முன்பு தொடங்கிய ராஷ்ட்ரீய ஸ்வதந்த்ரா கட்சி 7 நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. 10 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை இந்தக் கட்சி பெற்றுள்ளது. ஆளும் 5 கட்சிகள் கூட்டணி 85 இடங்களிலும், சிபிஎன்-யுஎம்எல் கட்சி தலைமையிலான கூட்டணி 55 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன.

275 உறுப்பினா்களைக் கொண்ட நேபாள பிரதிநிதிகள் சபைக்கு 165 உறுப்பினா்கள் நேரடி வாக்களிப்பு முறையில் தோ்ந்தெடுக்கப்படுகின்றனா். எஞ்சிய 110 உறுப்பினா்களும் விகிதாசார தோ்தல் நடைமுறைப்படி தோ்ந்தெடுக்கப்படுகின்றனா்.

நேபாளத்தில் ஒரு கட்சி அல்லது கூட்டணி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க 138 இடங்களில் வெற்றிபெற்றாக வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT