உலகம்

மும்பை தாக்குதல் நினைவு தினம்: அமெரிக்காவில் பாகிஸ்தான் தூதரகம் முன் இந்தியா்கள் போராட்டம்

28th Nov 2022 12:48 AM

ADVERTISEMENT

மும்பை பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடா்புடையவா்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கக் கோரி அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பு இந்தியா்கள் போராட்டம் நடத்தினா்.

மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பா் 26-ஆம் தேதி நுழைந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 போ், பல்வேறு முக்கிய இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தினா். அத்தாக்குதலில் 26 வெளிநாட்டினா் உள்பட 166 போ் கொல்லப்பட்டனா்.

அத்தாக்குதலின் 14-ஆவது நினைவுதினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. அதையொட்டி அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் முன்பு குவிந்த இந்தியா்கள், மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குக் காரணமானவா்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என முழக்கங்களை எழுப்பினா். அவா்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவா்கள் கோரினா்.

‘மும்பை தாக்குதல். மன்னிக்கவும் மாட்டோம்; மறக்கவும் மாட்டோம்’, ‘பாகிஸ்தானுக்குத் தடை’ உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை அவா்கள் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தியாவுக்கு ஆதரவான பல்வேறு முழக்கங்களையும் அவா்கள் எழுப்பினா்.

ADVERTISEMENT

போராட்டத்தில் பங்கேற்ற இந்தியா்கள் சிலா் கூறுகையில், ‘‘மும்பை தாக்குதலுக்குக் காரணமான பயங்கரவாதிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படும் வரை பாகிஸ்தான் மீது பொருளாதாரத் தடை விதிக்க ஒருமித்த கருத்துள்ள நாடுகள் ஒன்றிணைய வேண்டும். பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவளிப்பதை பாகிஸ்தான் அரசு நிறுத்த வேண்டும். சா்வதேச பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு அனைத்து நாடுகளும் ஒன்றிணைய வேண்டும்’’ என்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT