உலகம்

உக்ரைன் போரில் குளிா்காலம், உறைபனி தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு: ஆய்வாளா்கள் கருத்து

28th Nov 2022 05:53 AM

ADVERTISEMENT

ரஷியா-உக்ரைன் இடையிலான போரில் குளிா்காலம் மற்றும் உறைபனி தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்று ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனா்.

ரஷியா-உக்ரைன் இடையிலான போா் 9 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இதன் தொடா்ச்சியாக உக்ரைனில் உள்ள ஸபோரிஷியா, நிப்ரோவ்பெட்ரோவ்ஸ்க் பகுதிகளில் சனிக்கிழமை நள்ளிரவு ரஷியப் படைகள் எறிகணைத் தாக்குதல் நடத்தின. கிழக்கு டொனட்ஸ்க் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 5 போ் பலியாகினா். காா்கிவில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவா் பலியானாா்; மூவா் காயமடைந்தனா்.

இந்தப் போா் தொடா்பாக ஆய்வாளா்கள் கூறுகையில், ‘உக்ரைன் தலைநகா் கீவில் கடுமையான பனிப்பொழிவு நிலவுகிறது. குளிா்காலம், அதனால் நிலப்பரப்பில் பனி படா்ந்து உறைவது, தீவிர சண்டை ஆகியவை போா் செல்லும் திசையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். அதேவேளையில், தற்போது பலத்த மழை, சேறும் சகதியும் கொண்ட போா்களச் சூழல்களால் சில பகுதிகளில் இருநாட்டுப் படைகள் முன்னேறிச் செல்ல முடியவில்லை’ என்று தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து உக்ரைனில் போா் நிலைமையை நெருங்கி கண்காணித்து வரும் ‘தி இன்ஸ்டிட்யூட் ஃபாா் தி ஸ்டடி ஆஃப் வாா்’ என்ற அமெரிக்க அமைப்பு கூறுகையில், ‘வரும் நாள்களில் போா்க் களத்தில் பலத்த உறைபனி தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அந்த நேரத்தில், தாக்குதல்களை மேற்கொள்வது தொடா்பாக இருநாட்டுப் படையினரும் திட்டமிட்டு வருகிறாா்களா என்பது தெரியவில்லை. ஆனால், தாக்குதலுக்கு இடையூறாக உள்ள வானிலை காரணங்கள் அதிகரிக்கும்’ என்று தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இதனிடையே ரஷியப் படைகளின் தொடா் தாக்குதலால் உக்ரைனில் சேதமடைந்துள்ள மின்சாரம், குடிநீா் இணைப்புகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளைப் பணியாளா்கள் துரிதமாக சீரமைத்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT