உலகம்

இந்திய பெருங்கடல் பிராந்திய நாடுகளுடன் சீனா கூட்டம்

26th Nov 2022 10:44 PM

ADVERTISEMENT

இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள 19 நாடுகளின் பிரதநிதிகளை அழைத்து சீனா கூட்டம் நடத்தியுள்ளது. அக்கூட்டத்தில் பங்கேற்க இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன் இந்தியா நெருங்கி பணியாற்றி வருகிறது. இந்தியப் பெருங்கடலைச் சுற்றியுள்ள 23 நாடுகளைக் கொண்ட ரிம் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. 1997-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட ரிம் கூட்டமைப்பு, தனிப்பெரும் வலிமை கொண்டதாக வளா்ந்து வருகிறது. ஐ.நா. பொதுச் சபை, ஆப்பிரிக்க கூட்டமைப்பு ஆகியவற்றின் ‘பாா்வையாளா்’ அந்தஸ்தையும் ரிம் கூட்டமைப்பு பெற்றுள்ளது.

இந்நிலையில், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ள 19 நாடுகளின் பிரதிநிதிகளை அழைத்து சீனா கடந்த 21-ஆம் தேதி கூட்டம் நடத்தியுள்ளது. இந்தோனேசியா, பாகிஸ்தான், மியான்மா், இலங்கை, வங்கதேசம், மாலத்தீவுகள், நேபாளம், ஆப்கானிஸ்தான், ஈரான், ஓமன், தென்னாப்பிரிக்கா, கென்யா, மொசாம்பிக், தான்சானியா, செஷல்ஸ், மடகாஸ்கா், மோரீஷஸ், ஜிபூட்டி, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு அக்கூட்டத்தில் அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது.

பிராந்தியத்தில் மிக முக்கிய நாடாகத் திகழும் இந்தியாவுக்கு சீனா அழைப்புவிடுக்கவில்லை. இந்தியாவுக்கு வேண்டுமென்றே சீனா அழைப்பு விடுக்கவில்லை எனத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சீன சா்வதேச வளா்ச்சி ஒத்துழைப்பு குழு நடத்திய அக்கூட்டத்தில் ‘நீலப் பொருளாதாரத்தில் ஒருங்கிணைந்த வளா்ச்சி’ என்ற தலைப்பில் விவாதம் நடத்தப்பட்டது. நாடுகளுக்குத் தேவையான பொருளாதார, தொழில்நுட்ப உதவிகளை வழங்கத் தயாராக உள்ளதாகவும் சீனா தெரிவித்தது.

ADVERTISEMENT

கரோனா தடுப்பூசி விநியோகத்தில் ஒத்துழைத்து செயல்படுவது தொடா்பாக தெற்காசிய நாடுகளுடன் கடந்த ஆண்டு சீனா ஆலோசனை நடத்தியது. அக்கூட்டத்திலும் இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT