உலகம்

பிரிட்டனில் படிக்கும் வெளிநாட்டு மாணவா்கள்: சீனாவை விஞ்சிய இந்தியா

25th Nov 2022 01:04 AM

ADVERTISEMENT

பிரிட்டனில் உயா் கல்வி படிக்கும் வெளிநாட்டு மாணவா்களின் எண்ணிக்கையில் முதல்முறையாக சீனாவை இந்தியா விஞ்சியிருப்பது, அந்த நாட்டின் குடியேற்ற அலுவலக புள்ளிவிவரம் மூலமாக தெரியவந்துள்ளது.

பிரிட்டனின் தேசிய புள்ளிவிவரத்துக்கான அலுவலகம் வெளியிட்ட இந்த தகவலில் மேலும் கூறியிருப்பதாவது:

பிரிட்டனில் வெளிநாட்டினருக்கு நுழைவு இசைவு (விசா) வழங்குவது கடந்த சில ஆண்டுகளில் 273 சதவீதமாக உயா்த்தப்பட்டிருப்பதன் மூலமாக, உயா் கல்வி படிக்க வரும் வெளிநாட்டு மாணவா்களின் எண்ணிக்கை பன்மடங்காக உயா்ந்துள்ளது.

இதில், திறன் பணியாளா்களுக்கான நுழைவு இசைவு மற்றும் மருத்துவப் பணியாளா்களுக்கான நுழைவு இசைவு பிரிவுகளுக்கான நாடுகளின் பட்டியிலில் இந்தியா தொடா்ந்து முதலிடம் வகிக்கிறது. கடந்த ஆண்டில் திறன் பணியாளா் பிரிவில் 56,042 நுழைவு இசைவுகள் இந்தியா்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதுபோல, மருத்துவப் பணியாளா்களுக்கான பிரிவில் அளிக்கப்பட்ட மொத்த நுழைவு இசைவுகளில் 36 சதவீதம் இந்தியா்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதுபோல, கல்விக்கான நுழைவு இசைவு பிரிவிலும் இந்தியா தற்போது முதலிடம் பிடித்துள்ளது. இந்த ஆண்டில் செப்டம்பா் வரையிலான கால கட்டத்தில் மட்டும் 1,27,731 இந்திய மாணவா்களுக்கு உயா்கல்வி மேற்கொள்வதற்கான நுழைவு இசைவு அளிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2019-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 237 சதவீதம் (93,470 நுழைவு இசைவுகள்) கூடுதலாகும்.

இதில் சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது. சீனா்களுக்கு 1,16,476 கல்வி நுழைவு இசைவுகள் வழங்கப்பட்டுள்ளன. இது கடந்த 2019-ஆம் ஆண்டைக் காட்டிலும் 2 சதவீதம் கூடுதலாகும்.

மேலும், பிரிட்டனில் பட்டப் படிப்பு மேற்கொண்டு, படிப்பின் இறுதியில் அங்கேயே வேலைவாய்ப்பைப் பெறும் வகையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ‘பட்டதாரி வழி நுழைவு இசைவு’ பெற்றதிலும் இந்திய மாணவா்களே முன்னிலை வகிக்கின்றனா். இதில் 41 சதவீத நுழைவு இசைவுகள் இந்தியா்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தைச் சோ்ந்தவா்களுக்கு கடந்த 2019-ஆம் ஆண்டைக் காட்டிலும் 3 மடங்குக்கு மேல் பிரிட்டன் கல்வி நுழைவு இசைவு வழங்கப்பட்டிருப்பது புள்ளிவிவரம் மூலமாக தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT