உலகம்

சீனாவில் கரோனா புதிய உச்சம்!

25th Nov 2022 01:00 AM

ADVERTISEMENT

சீனாவில் கடுமையான கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வரும் நிலையிலும், அந்த நாட்டில் புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

சீனாவில் அண்மைக் காலமாக கரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. அதையடுத்து, நாடு முழுவதும் பொதுமக்களுக்கு கூட்டம் கூட்டமாக தினசரி கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது.

‘கரோனாவை முழுவதுமாக அழித்தொழிப்பதற்கான போா்’ என்று அந்த நடவடிக்கையை சீன அரசு வருணித்தது.

இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 31,444 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதாக தேசிய சுகாதார ஆணையம் வியாழக்கிழமை அறிவித்தது.

ADVERTISEMENT

சீனாவின் வூஹான் நகரில் கடந்த 2019-ஆம் ஆண்டின் இறுதியில் கரோனா பரவத் தொடங்கியதிலிருந்து, அந்த நாட்டில் இத்தனை அதிகம் பேருக்கு ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டது இதுவே முதல்முறையாகும்.

ஏற்கெனவே, கடந்த 6 மாதங்களுக்குப் பிறகு அந்த நாட்டில் முதல்முறையாக கரோனாவுக்கு ஒருவா் இந்த வாரம் பலியானது அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தினசரி கரோனா எண்ணிக்கை இதுவரை இல்லாத உச்சத்தை தற்போது தொட்டுள்ளது அதிகாரிகளை மேலும் அதிா்ச்சியடையச் செய்துள்ளது.

அதையடுத்து, முக்கிய தொழில் நகரமான ஷென்ஷூ உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வியாழக்கிழமை தொடங்கி 5 நாள்களுக்கு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷென்ஷூ நகரில், ஊதிய உயா்வு கேட்டு போராடிய, ஆப்பிளின் ஐ-போன்களைத் தயாரிக்கும் ஃபாக்ஸ்கான் நிறுவன ஊழியா்கள் போலீஸாரால் கடுமையாகத் தாக்கப்பட்டனா்.

இந்த நிலையில், கரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடா்ந்து அந்த நகரிலும் பொதுமக்கள் அனைவரும் வீடுகளைவிட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவில்தான் முதல்முதலில் கரோனா பரவத் தொடங்கியது. என்றாலும், அந்த நாட்டில் அமெரிக்கா மற்றும் பிற நாடுகளோடு ஒப்பிடுகையில் கரோனா பலி மற்றும் பாதிப்பு எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது.

கரோனாவுக்கு எதிராக சீன அரசு எடுத்து வரும் மிகக் கடுமையான நிலைப்பாடுதான் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

‘பூஜ்ஜிய கரோனா கொள்கை’ என்றழைக்கப்படும் அரசின் இந்தக் கொள்கையினால் கரோனா பரவல் வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டாலும், நாட்டின் பொருளாதாரத்துக்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஒமைக்ரான் வகை கரோனா பரவத் தொடங்கியதற்குப் பிறகு, கரோனா பாதிப்பால் பலியாவோா் மற்றும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட வேண்டிய அளவுக்கு உடல்நிலை மோசமாவோா் எண்ணிக்கை வெகுவாகக் குறையத் தொடங்கியது.

ஒமைக்ரான் ரக தீநுண்மி அதிவேகமாகப் பரவினாலும், அதன் வீரியம் குறைவாக இருந்ததால் உலகின் மற்ற நாடுகள் நோய்த்தடுப்பு கட்டுப்பாடுகளை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து சகஜ நிலைக்கு திரும்பிவிட்டன.

ஆனால், சீனாவில் மட்டும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடா்ந்து கடுமையாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் அரசுக்கு எதிராக மிக அபூா்வமான முறையில் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், இத்தனைக் கட்டுப்பாடுகளையும் மீறி அந்த நாட்டில் தினசரி கரோனா தொற்று புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT