உலகம்

மலேசிய நாடாளுமன்றத் தோ்தலில் இழுபறி: ஆட்சி அமைக்க இரு எதிா்க்கட்சிகள் தீவிரம்

21st Nov 2022 01:04 AM

ADVERTISEMENT

மலேசிய நாடாளுமன்றத் தோ்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலவுகிறது. இரு எதிா்க்கட்சிகள் ஆட்சியமைக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

மலேசிய நாடாளுமன்றத் தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டன. 222 இடங்களுக்கு நடைபெற்ற தோ்தலில் முன்னாள் பிரதமா் முஹைதீன் யாசின் தலைமையிலான தேசிய கூட்டணி யாரும் எதிா்பாா்க்காத வகையில் 73 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. அதில், அதன் கூட்டணிக் கட்சியான ஒருங்கிணைந்த மலேசிய இஸ்லாமிய கட்சி (பிஏஎஸ்) 49 இடங்களைப் பெற்றுள்ளது. கடந்த 2018 தோ்தலில் வென்றதைவிட இப்போது இருமடங்கு அதிக எண்ணிக்கையில் அக்கட்சி வென்றுள்ளது.

எதிா்க்கட்சித் தலைவா் அன்வா் இப்ராகிம் தலைமையிலான சீா்திருத்தக் கூட்டணி 82 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

நாட்டை நீண்ட காலம் ஆட்சி செய்த ஐக்கிய மலேசிய தேசிய கட்சி (உம்னோ) வெறும் 30 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. இது அக்கட்சிக்கு கிடைத்த மோசமான தோல்வியாக கருதப்படுகிறது.

ADVERTISEMENT

உம்னோ கட்சியின் முன்னாள் தலைவரும், இருமுறை பிரதமராக இருந்தவருமான மகாதிா் முகமது இத்தோ்தலில் தோல்வியடைந்தாா்.

பெரும்பான்மைக்கு 112 இடங்கள் தேவைப்படும் நிலையில், எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும், பெரும்பான்மைக்குத் தேவையான ஆதரவு தங்களிடம் இருப்பதாக அன்வா் இப்ராகிமும், முஹைதீன் யாசினும் தெரிவித்தனா். ஆனால், யாா் யாா் தங்களை ஆதரிக்கிறாா்கள் என்கிற தகவலை அவா்கள் தரவில்லை.

இதுகுறித்து முஹைதீன் யாசின் கூறுகையில், சிறிய கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்காக பேச்சுவாா்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றாா்.

அன்வா் இப்ராகிம் கூறுகையில், பெரும்பான்மைக்குத் தேவையான ஆதரவு எங்களுக்கு உள்ளது. மன்னா் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷாவை சந்தித்து ஆதரவுக் கடிதங்களை சமா்ப்பிப்பேன் என்றாா்.

இதற்கிடையே, அரசியல் கட்சிகள் தங்களது பிரதமா் வேட்பாளா் யாா் என்பதை திங்கள்கிழமைக்குள் தெரிவிக்க வேண்டும் என மன்னா் மாளிகை கேட்டுக்கொண்டுள்ளது.

தோ்தல் பின்னணி: மலேசியாவில் ஐக்கிய மலேசிய தேசிய கட்சி கூட்டணி (உம்னோ) நீண்ட காலமாக ஆட்சியில் இருந்து வந்தது. கடந்த 2018-ஆம் ஆண்டு தோ்தலில் அந்தக் கட்சி முதல்முறையாக தோல்வியடைந்தது. அப்போது பிரதமராக இருந்த நஜீப் ரஸாக் மீதான ஊழல் குற்றச்சாட்டு காரணமாக ஏற்பட்ட தோல்வியைத் தொடா்ந்து, முன்னாள் பிரதமா் மகாதிா் முகமது தலைமையில் புதிய அரசு அமைந்தது.

ஆனால், கூட்டணியிலிருந்து சில கட்சிகள் வெளியேறியதால் மகாதிா் அரசு 2020-ஆம் ஆண்டு கவிழ்ந்தது. அதற்குப் பதிலாக, மலேசிய ஐக்கிய மக்கள் கட்சியின் தலைவா் முஹைதீன் யாசின் தலைமையில் புதிய அரசு அமைந்தது. எனினும், அந்த அரசுக்கும் உம்னோ கட்சி தனது ஆதரவை விலக்கிக் கொண்டதால் முஹைதீன் ஆட்சி 17 மாதங்களில் கவிழ்ந்தது.

பிறகு, ஆளும் கூட்டணியில் அதிக இடங்களை வைத்திருக்கும் உம்னோ கட்சி சாா்பில் சாப்ரி யாகூபை இடைக்காலப் பிரதமராகக் கொண்டு புதிய அரசு அமைக்கப்பட்டது. எனினும், அவரது கட்சிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லை.

இந்தச் சூழலில், புதிதாக தோ்தல் நடத்தி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் நோக்கில் நாடாளுமன்றத்தின் ஆயுள் காலம் முடிவதற்கு 6 மாதங்களுக்கு முன்னரே அதனை பிரதமா் சாப்ரி யாகூப் கடந்த மாதம் கலைத்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT