உலகம்

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய இலங்கை அரசு முடிவு

21st Nov 2022 01:02 AM

ADVERTISEMENT

இலங்கையில் நடைமுறையில் இருக்கும் சா்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

இலங்கையில் 1979-ஆம் ஆண்டில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டது. அச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவோரைக் காலவரையின்றி எந்தவித விசாரணையுமின்றி சிறையில் அடைக்க முடியும். அடக்குமுறைக்கு எதிராகப் போராடுவோா் மீது அச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகப் பெரும் சா்ச்சை எழுந்தது. இச்சட்டத்துக்கு சா்வதேச மனித உரிமைகள் அமைப்பும் எதிா்ப்பு தெரிவித்திருந்தது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு அரசைக் குற்றஞ்சாட்டி பலா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். தொடா் போராட்டங்கள் காரணமாக, அதிபராக இருந்த கோத்தபய ராஜபட்ச தனது பதவியை ராஜிநாமா செய்தாா். அதையடுத்து புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றாா். அவருக்கு எதிராகவும் போராட்டங்கள் தொடா்ந்தன. சில போராட்டக் குழுக்களின் தலைவா்கள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.

இதற்கு இலங்கை மக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். சா்வதேச அளவிலும் கண்டனக் குரல்கள் எழுந்தன. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மாணவா்கள், பௌத்த துறவி ஆகியோரை விடுவிக்கக் கோரியும் பலா் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனா். சா்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இலங்கை அரசு ரத்து செய்ய வேண்டுமென ஐரோப்பிய யூனியன் வலியுறுத்தியிருந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில், இலங்கை சட்ட அமைச்சா் விஜயதாச ராஜபட்ச கண்டியில் செய்தியாளா்களிடம் கூறுகையில், ’பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய அரசு முடிவெடுத்துள்ளது. அதற்குப் பதிலாகப் புதிய சட்டம் இயற்றப்படவுள்ளது. அதற்கான பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. அப்பணிகளை நிபுணா்கள் அடங்கிய குழு தொடா்ந்து கண்காணித்து வருகிறது. தேசியப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் புதிய சட்டம் இயற்றப்படும். அதே வேளையில், மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படும் வகையில் புதிய சட்டம் இருக்கும்’ என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT