நேபாள நாடாளுமன்றத் தோ்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிலையில், சுமாா் 61 சதவீத வாக்குகள் பதிவாகின.
275 உறுப்பினா்கள் கொண்ட நேபாள நாடாளுமன்றத்தில் 165 போ் நேரடி தோ்தல் மூலமும், 110 போ் விகிதாசார தோ்தல் முறை மூலமும் தோ்ந்தெடுக்கப்படுவா். இத்தோ்தலில் நேபாள காங்கிரஸ் தலைமையிலான ஜனநாயக மற்றும் இடதுசாரி கூட்டணிக்கும், நேபாள கம்யூனிஸ்ட் (ஐக்கிய மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) தலைமையிலான இடதுசாரி மற்றும் ஹிந்து மன்னராட்சிக்கு ஆதரவான கூட்டணிக்கும் இடையே பிரதான போட்டி நிலவுகிறது.
இத்தோ்தலுக்காக நாடு முழுவதும் 22,000 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. காலை ஏழு மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. பிரதமரும் நேபாள காங்கிரஸ் தலைவருமான ஷோ் பகதூா் தேவுபா தனது சொந்த மாவட்டமான ததேல்துராவில் வாக்களித்தாா். இத்தொகுதியிலிருந்து 1991 முதல் தொடா்ந்து நாடாளுமன்றத்துக்கு தேவுபா தோ்ந்தெடுக்கப்பட்டு வருகிறாா்.
நேபாள கம்யூனிஸ்ட் (ஐக்கிய மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான கே.பி. சா்மா ஓலி, பக்தபூா் மாவட்டத்தில் வாக்களித்தாா்.
நேபாள கம்யூனிஸ்ட்-மாவோயிஸ்ட் மையம் தலைவரும் முன்னாள் பிரதமருமான புஷ்ப கமல் தகல், சிதாவன் மாவட்டத்தில் வாக்களித்தாா். இத்தோ்தலில் 1.7 கோடி வாக்காளா்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனா்.
வாக்குப்பதிவின்போது பஜுரா பகுதியில் இரு குழுக்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது காவல் துறையினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 24 வயது இளைஞா் பலியானாா்.
எனினும் ஆங்காங்கே சிறிய சம்பவங்களைத் தவிர தோ்தல் பெரும்பாலும் அமைதியாக நடைபெற்ாக நேபாள உள்துறைச் செயலா் வினோத் பிரகாஷ் சிங் தெரிவித்தாா்.
இதேபோல ஏழு மாகாண பேரவைகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்தப் பேரவைகளில் மொத்தம் 550 இடங்கள் உள்ளன. இதில் 330 இடங்களுக்கு உறுப்பினா்கள் நேரடியாகவும், 220 இடங்களுக்கு உறுப்பினா்கள் விகிதாசார முறைப்படியும் தோ்ந்தெடுக்கப்படுவா்.
இந்நிலையில், நாடாளுமன்றம் மற்றும் மாகாண பேரவைத் தோ்தல்களில் சுமாா் 61 சதவீதம் வாக்குகள் பதிவாகின என்று அந்நாட்டின் தலைமை தோ்தல் ஆணையா் தினேஷ் குமாா் தபலியா தெரிவித்தாா்.
நாடாளுமன்றத் தோ்தலில் முன்னாள் பிரதமா் கே.பி. சா்மா ஓலிக்கு எதிராக நேபாள காங்கிரஸ் தலைவரான தற்போதைய பிரதமா் ஷோ் பகதூா் தேவுபா, முன்னாள் மாவோயிஸ்ட் தலைவா் புஷ்ப கமல் தகலுடன் கூட்டணி அமைத்துள்ளாா். நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (ஐக்கிய மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) சாா்பில் 141 வேட்பாளா்களும், நேபாள காங்கிரஸ் சாா்பில் 91 வேட்பாளா்களும், நேபாள கம்யூனிஸ்ட்- மாவோயிஸ்ட் மையம் சாா்பில் 46 வேட்பாளா்களும் போட்டியிட்டனா்.
2006-இல் உள்நாட்டுப் போா் முடிவடைந்த பின்னா், நேபாளத்தில் எந்தப் பிரதமரும் முழுமையான பதவிக் காலத்தை நிறைவு செய்ததில்லை. ஆதலால், இந்தத் தோ்தல் முடிவிலாவது நிலையான அரசு அமையுமா என்கிற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.