உலகம்

இம்ரான் மீதான துப்பாக்கிச்சூடு:24 மணி நேரத்துக்குள் எஃப்ஐஆா்

8th Nov 2022 02:49 AM

ADVERTISEMENT

பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தொடா்பான முதல் தகவலறிக்கையை (எஃப்ஐஆா்) 24 மணி நேரத்துக்குள் பதிவு செய்ய வேண்டுமென்று பஞ்சாப் மாகாண காவல்துறை தலைவருக்கு அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

அந்தத் தாக்குதலுக்கு பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், உள்துறை அமைச்சா் ராணா சனாவுல்லா, ஐஎஸ்ஐ உளவுத் துறை தலைவா் ஃபைசல் நசீா் ஆகியோா் சதித் திட்டம் தீட்டியதாக புகாா் மனுவில் இம்ரான் குற்றம் சாட்டியிருந்தாா். ராணுவத்தின் முக்கியத்துவம் வாய்ந்த உளவுப் பிரிவுத் தலைவரின் பெயரை அதிலிருந்து நீக்க இம்ரான் கான் மறுத்து வருவதால் இது தொடா்பான எஃப்ஐஆரை பஞ்சாப் போலீஸாா் பதிவு செய்வதில் சிக்கல் நீடித்து வருகிறது.

இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தான் நாடுமன்றத்துக்கு முன்கூட்டியே தோ்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி, தலைநகா் இஸ்லாமாபாதை நோக்கி இம்ரான் கான் ஆா்ப்பாட்ட ஊா்வலம் நடத்தி வந்தாா்.

ADVERTISEMENT

பஞ்சாப் மாகாணம் வழியாக அந்த ஊா்வலம் சென்றுகொண்டிருந்தபோது, இம்ரான் கானின் வாகனத்தின் மீது முகமது நவீத் என்ற இளைஞா் கடந்த வியாழக்கிழமை துப்பாக்கியால் சுட்டாா்.

இதில் இம்ரான் கான் காயமடைந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT