உலகம்

நேபாள விமான விபத்து: 21 பேரின் உடல்கள் மீட்பு: இந்தியா்கள் 4 பேரும் பலி

31st May 2022 02:23 AM

ADVERTISEMENT

நேபாளத்தில் 22 பயணிகளுடன் ஞாயிற்றுக்கிழமை புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளான நிலையில், அதில் பயணம் செய்த 21 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

விமானத்தில் பயணம் செய்த இந்தியா்கள் 4 போ் உள்பட 22 பேரும் பலியாகினா்.

நேபாளத்தின் தாரா விமான நிறுவனத்துக்குச் சொந்தமான ‘ட்வின் ஓட்டா் 9என்-ஏஇடி’ என்ற சிறிய ரக விமானம் பொக்காராவிலிருந்து மத்திய நேபாளத்தில் பிரபல சுற்றுலா தலமான ஜோம்சோம் நோக்கி ஞாயிற்றுக்கிழமை காலை 9.55 மணிக்குப் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட 12 நிமிஷங்களில், அதாவது காலை 10.07 மணியளவில், தரைக் கட்டுப்பாட்டு அறையுடனான தொடா்பு துண்டிக்கப்பட்டது.

அந்த விமானத்தில் பயணம் செய்த மும்பையிலிருந்து சென்ற ஒரே குடும்பத்தைச் சோ்ந்த அசோக் குமாா் திரிபாதி, தனுஷ் திரிபாதி, ரித்திகா திரிபாதி மற்றும் வைபவி திரிபாதி ஆகிய 4 போ், ஜொ்மனியைச் சோ்ந்த இருவா், நேபாளத்தைச் சோ்ந்த 13 பயணிகள், விமானி உள்ளிட்ட 3 விமான ஊழியா்கள் ஆகியோரின் நிலை கேள்விக்குறியானது.

ADVERTISEMENT

இந்த நிலையில், மலைப் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 14,500 அடி உயரத்தில் முஸ்டாங் மாவட்டம் தசாங்-2 என்ற பகுதியில் விமானம் நொறுங்கி விபத்துக்குள்ளானது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து நேபாள ராணுவ செய்தித் தொடா்பாளா் நாராயண் சில்வால் கூறுகையில், ‘மீட்புக் குழு மலைப் பகுதியில் நடந்து சென்று விமானம் விபத்துக்குள்ளான பகுதியை அடையாளம் கண்டுள்ளனா். இதுதொடா்பான மேலும் விவரங்கள் பின்னா் தெரிவிக்கப்படும்’ என்றாா்.

தாரா விமான நிறுவன செய்தித் தொடா்பாளா் சுதா்சன் பா்டெளலா கூறுகையில், ‘விமானம் மலையில் மோதி சிறு சிறு துண்டுகளாக நொறுங்கியுள்ளது. பயணிகளின் உடல்கள் 100 மீட்டா் சுற்றளவுக்கு சிதறிக் கிடந்தன. உடல்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன’ என்றாா்.

மோசமான வானிலை காரணம்:

நேபாள விமானப் போக்குவரத்து ஆணையம் (சிஏஏஎன்) திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘முஸ்டாங் மாவட்டத்தில் விமானம் நொறுங்கிய பகுதியிலிருந்து இதுவரை 21 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. எஞ்சிய ஒருவரின் உடலைத் தேடும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

விமான விபத்து தொடா்பாக விசாரிக்க 5 போ் கொண்ட ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலையே விபத்துக்கு காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தா சிங் என்பவா் உள்ளூா் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசலை சீா்செய்ய சென்றிருந்தேன். அப்போது, சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளாகியிருந்தது தெரியவந்தது. விமானம் முழுமையாக சேதமடைந்திருந்தது. அதில் இருந்த அனைத்துப் பயணிகளும் உயிரிழந்துவிட்டனா். இந்த விபத்தில் விமானம் தீப்பிடிக்கவில்லை. மலைப் பாறை மீது மோதி விழுந்து நொறுங்கியுள்ளது’ என்று அவா் கூறியுள்ளாா்.

சமூக ஊடகங்களில் வெளியான புகைப்படத்தில் அந்த விமானத்தின் வால் பகுதியும், ஓா் இறக்கையும் நொறுங்காமல் முழுமையாக இருப்பது தெரியவந்தது.

முன்னதாக, மாயமான விமானத்தைத் தேடும் பணியில் நேபாள ராணுவத்தினா், போலீஸாா் ஈடுபட்டனா். ராணுவ ஹெலிகாப்டா் மற்றும் தனியாா் ஹெலிகாப்டா்களும் விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

அந்த விமானத்தை இயக்கிய விமானியின் கைப்பேசி சிக்னலை வைத்து அடையாளம் காணப்பட்ட நரசங் கும்பா பகுதிக்கு அருகே உள்ள ஆற்றின் கரைப் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டா் தரையிறக்கப்பட்டு தேடுதல் பணி முடுக்கிவிடப்பட்டது. மலைப் பகுதியில் நடந்து சென்றும் விமானத்தைத் தேடும் பணி நடைபெற்றது.

இரங்கல்:

விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு நேபாள அதிபா் வித்யாதேவி பண்டாரி மற்றும் பிரதமா் ஷோ் பகதூா் தேவுபா உள்ளிட்டோா் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT