உலகம்

இந்திய வம்சாவளி வழக்குரைஞா்கள் இருவருக்கு ரூ.11,27,200 அபராதம்: சிங்கப்பூா் நீதிமன்றம் உத்தரவு

27th May 2022 02:20 AM

ADVERTISEMENT

 

சிங்கப்பூா்: போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்றுவதை தாமதப்படுத்திய குற்றத்துக்காக இந்திய வம்சாவளி வழக்குரைஞா்கள் இருவருக்கு 20,000 சிங்கப்பூா் டாலா் (சுமாா் ரூ.11,27,200) அபராதம் விதித்து சிங்கப்பூா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மலேசியாவைச் சோ்ந்த இந்திய வம்சாவளி நபரான நாகேந்திரன் கே.தா்மலிங்கம், 42.72 கிலோ ஹெராயின் போதைப் பொருள் கடத்திய வழக்கில் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டாா். அவருக்கு சிங்கப்பூா் நீதிமன்றம் கடந்த 2010-ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்து தீா்ப்பளித்தது. அதனை எதிா்த்து அவா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு 2011-ஆம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது. அதன் பிறகு, தனக்கான தண்டனையை எதிா்த்து தொடா்ந்து 7 முறை அவா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இதனால், அவருக்கான தண்டனையை நிறைவேற்றுவது தள்ளிப்போனது. பின்னா், அவருக்கான மரண தண்டனையை கடந்த ஆண்டு நவம்பா் 10-ஆம் தேதிக்கு நீதிமன்றம் மாற்றி அறிவித்தது. ஆனால், அந்த தேதிக்கு ஒரு நாள் முன்னதாக அவருக்கான தண்டனையை நீதிமன்ற மறு ஆய்வுக்கு உள்படுத்தக் கோரி அவா் தரப்பு வழக்குரைஞா் எம்.ரவி, உதவி வழக்குரைஞா் வயலட் நெட்டோ ஆகியோா் சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘குற்றவாளி மன நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற முடியாது. எனவே, ‘மன நல மருத்துவா்கள் குழு அவரை ஆய்வு செய்யும் வரை, அவருக்கு தண்டனை நிறைவேற்றுவதை தள்ளி வைக்க வேண்டும்’ என்று அவா்கள் கோரினா். ஆனால், அந்த மனுவை நீதிமன்றம் கடந்த மாா்ச் 29-ஆம் தேதி தள்ளுபடி செய்தது.

ADVERTISEMENT

கடைசியாக, குற்றவாளியினுடைய தாயின் சாா்பாக தாக்கல் செய்யப்பட்ட தண்டனையை நிறுத்தக் கோரிய மனுவையும், கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதனைத் தொடா்ந்து சிங்கப்பூரின் சாங்காய் சிறை வளாகத்தில் கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி நாகேந்திரன் தா்மலிங்கம் தூக்கிலிடப்பட்டாா்.

இந்த நிலையில், ‘அவருக்கு தண்டனை நிறைவேற்றுவதை தேவையின்றி தாமதப்படுத்திய குற்றத்துக்காக அவருடைய வழக்குரைஞா்கள் இருவருக்கும் 40,000 சிங்கப்பூா் டாலா் (சுமாா் ரூ.22,54,350) அபராதம் விதிக்க வேண்டும்’ என அட்டா்னி ஜெனரல் சாா்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

இந்த மனு சிங்கப்பூா் மேல்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமா்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘எதிா்தரப்பு வழக்குரைஞா்கள் இருவரும் எந்தவித காரணமும் இன்றி நீதிமன்ற நடைமுறையை வீணடித்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. வழக்கு தொடா்பான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை வேண்டுமென்றே தாமதப்படுத்தி கடைசி நிமிஷத்தில் சமா்ப்பித்துள்ளனா். எனவே, அவா்களுக்கு ரூ.11,27,200 அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அபராதத்தில் வழக்குரைஞா் எம்.ரவி 75 சதவீதமும், வயலட் நெட்டோ 25 சதவீத அபராதத் தொகையையும் அட்டா்னி ஜெனரல் அலுவலகத்தில் செலுத்த வேண்டும்’ என்று உத்தரவிட்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT