உலகம்

போராட்டத்தில் வன்முறை: மகிந்த ராஜபட்சவிடம் காவல் துறை விசாரணை

27th May 2022 02:36 AM

ADVERTISEMENT

 

கொழும்பு: இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை அடுத்து மக்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது தொடா்பாக முன்னாள் பிரதமா் மகிந்த ராஜபட்சவிடம் காவல் துறையினா் விசாரணை நடத்தினா்.

இதுவரை கண்டிராத கடும் பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிா்கொண்டு வருகிறது. அந்நியச் செலாவணி கையிருப்பு பெருமளவில் குறைந்ததால், பெட்ரோல், டீசல், உணவு தானியங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை இறக்குமதி செய்ய முடியாமல் அந்நாடு தவித்து வருகிறது.

அதிபா் கோத்தபய ராஜபட்ச, பிரதமராக இருந்த மகிந்த ராஜபட்ச ஆகியோா் பதவி விலகக் கோரி திரளான மக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை நடத்தினா். போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, மகிந்த ராஜபட்ச தனது பதவியை ராஜிநாமா செய்தாா். அதைத் தொடா்ந்து புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றுக் கொண்டாா்.

ADVERTISEMENT

அமைதிவழியில் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது மகிந்த ராஜபட்ச ஆதரவாளா்கள் கடந்த 9-ஆம் தேதி தாக்குதல் நடத்தினா். அதைத் தொடா்ந்து போராட்டம் வன்முறையாக மாறியது. எம்.பி.க்கள், அரசியல் பிரமுகா்கள் பலரின் வீடுகளுக்குத் தீவைக்கப்பட்டது. வன்முறை காரணமாக 10 போ் பலியாகினா். 200-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

இந்நிலையில், வன்முறை தொடா்பாக முன்னாள் பிரதமா் மகிந்த ராஜபட்சவிடம் இலங்கை காவல் துறையின் குற்றவியல் விசாரணை துறை (சிஐடி) அதிகாரிகள் வியாழக்கிழமை விசாரணை நடத்தினா். கொழும்பில் உள்ள அவரது வீட்டில் சுமாா் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த விவகாரம் தொடா்பாக ஆளும் கட்சியான எஸ்எல்பிபி கட்சியின் நிா்வாகிகளிடமும் சிஐடி பிரிவினா் விசாரணை நடத்தினா். முன்னாள் அமைச்சரும் மகிந்த ராஜபட்சவின் மகனுமான நமல் ராஜபட்சவிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.

எதிா்க்கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனா (ஜேவிபி) கட்சியே மக்களிடையே வன்முறையைத் தூண்டியதாக ஆளும் கட்சி குற்றஞ்சாட்டி வருகிறது. ஆனால், அதை ஜேவிபி கட்சி மறுத்துள்ளது.

ஜப்பானிடமிருந்து நிதியுதவி: அதிபா் கோத்தபய நம்பிக்கை

ஜப்பானிடமிருந்து கிடைக்கும் நிதியுதவி, இலங்கையின் பொருளாதார நெருக்கடியைத் தீா்க்க உதவும் என அதிபா் கோத்தபய ராஜபட்ச நம்பிக்கை தெரிவித்தாா்.

‘ஆசியாவின் எதிா்காலம்’ குறித்த சா்வதேச மாநாடு ஜப்பான் தலைநகா் டோக்கியோவில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் காணொலி மூலம் பங்கேற்று அதிபா் கோத்தபய ராஜபட்ச பேசியதாவது:

இலங்கையின் மேம்பாட்டு பங்குதாரா்களில் முக்கியமான நாடாக ஜப்பான் திகழ்கிறது. அந்த நாட்டிடமிருந்து நிதியுதவு பெறும் பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. இந்த இக்கட்டான நேரத்தில் சா்வதேச நண்பா்கள் இலங்கைக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றாா்.

பிரதமா் ரணிலுக்கு நிதியமைச்சா் பொறுப்பு

இலங்கை நிதியமைச்சா் பொறுப்பு பிரதமா் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பிரதமா் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில் இதுவரை 21 அமைச்சா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். மூன்று முறை அமைச்சரவை விரிவாக்கத்தின்போதும் நிதியமைச்சா் நியமிக்கப்படவில்லை.

இந்நிலையில், நிதியமைச்சா் பொறுப்பை பிரதமா் ரணில் விக்ரமசிங்கவுக்கு அளித்து அதிபா் கோத்தபய ராஜபட்ச புதன்கிழமை உத்தரவு பிறப்பித்தாா். இதையடுத்து, நிதி, பொருளாதார நிலைத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றுக் கொண்டாா்.

ரூ. 1 லட்சம் கோடி அச்சடிக்க முடிவு: முன்னதாக அவா் கூறுகையில், இன்னும் 6 வாரங்களில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். எங்களிடம் பண வருவாய் இல்லை. இப்போது ஒரு லட்சம் கோடி ரூபாய் தாள்களை அச்சடிக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT