உலகம்

செனகல்: மருத்துவமனையில் தீ; 11 பச்சிளம் குழந்தைகள் பலி

26th May 2022 10:21 AM

ADVERTISEMENT

 

செனகல் நாட்டில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தனர்.

செனகல் நாட்டில் உள்ள பொது மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் வார்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில், 11 பச்சிளம் குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர். 

இதுகுறித்து அந்நாட்டு அதிபர் மேக்கி சால் சுட்டுரையில் வெளியிட்டுள்ள பதிவில், செனகலின் மேற்கு நகரமான டிவௌவான் நகரில் உள்ள பொது மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகளுக்கான வார்டில் புதன்கிழமை நள்ளிரவு திடீரென ஏற்பட்ட தீ விபத்தில்  புதிதாகப் பிறந்த 11 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT

இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள அதிபர், "குழந்தைகளின் தாய்மார்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு, எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று சால் கூறியுள்ளார். 

இதேபோன்று கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வடக்கு நகரமான லிங்குவேரில் ஒரு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கான வார்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 குழந்தைகள் உயிரிழந்தனர். 

கடந்த ஏப்ரல் மாதம், வடமேற்கு நகரமான லூகாவில் உள்ள ஒரு பொது மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த ஒரு கர்ப்பிணிப் பெண், சிகிச்சை பெறுவதற்கு முன்பே தீ விபத்தில் உயிரிழந்தார். 

இந்த விபத்தில்,  "ஆபத்தில் இருந்த ஒருவருக்கு உதவத் தவறியதற்காக"  மருத்துவர்கள் 3 பேருக்கு ஆறு மாதம் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டது அந்நாட்டு உயர்நீதிமன்றம்.  

2017 ஆம் ஆண்டில், நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள மெடினா கௌனாஸ் கிராமத்தில் இஸ்லாமிய திருவிழாவின் போது ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர், 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 2010 ஆம் ஆண்டு இதே ஆன்மீகத் திருவிழாவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆறு உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.

இதையும் படிக்க | ‘ஐரோப்பிய நாடுகளிடையே ஒற்றுமையில்லை’

ADVERTISEMENT
ADVERTISEMENT