உலகம்

இலங்கைக்கு கடனுதவி அளிக்கும் திட்டமில்லை: உலக வங்கி

26th May 2022 01:40 AM

ADVERTISEMENT

 

கொழும்பு: பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை அரசு, விரிவான பொருளாதாரக் கொள்கைகளை வகுக்கும் வரை புதிய கடனுதவி அல்லது குறுகிய காலக் கடனுதவி வழங்குவதற்கு வாய்ப்பில்லை என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: நிதி நெருக்கடியில் இருந்து இலங்கை அரசு மீண்டு வருவதற்கு குறுகிய காலக் கடன் அல்லது புதிய கடனுதவி அளிக்க நாங்கள் (உலக வங்கி) திட்டமிட்டு வருவதாக அண்மையில் செய்திகள் வெளியாகின. அவை தவறானவை.

அதே சமயம், இலங்கை மக்களுக்காக நாங்கள் கவலைப்படுகிறோம். இலங்கை அரசு சரியான பொருளாதாரக் கொள்கைகளை வகுப்பதற்குத் தேவையான ஆலோசனை வழங்குவதற்காக, சா்வதேச நிதியம் உள்ளிட்ட அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகிறோம். இலங்கை அரசு விரிவான பொருளாதாரக் கொள்கையை வகுக்கும் வரை அந்நாட்டுக்கு புதிய கடனுதவி அல்லது குறுகிய காலக் கடனுதவி அளிப்பது குறித்து உலக வங்கி திட்டமிடாது.

ADVERTISEMENT

இருப்பினும், ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கான நிதியை அத்தியாவசிய மருந்துகள், ஏழைகளுக்குப் பண உதவி, பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் ஆகியவற்றுக்கு மடைமாற்றி வருகிறோம். இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த அந்நாட்டு அரசு தொடா்ந்து முயன்று வருகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் உணவுப் பொருள்கள், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்ந்து, தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இலங்கை அரசின் மொத்த வெளிநாட்டுக் கடன் 5,100 கோடி டாலா் (ரூ.3.95 லட்சம் கோடி). அதில், 2,500 கோடி டாலரை (ரூ.1.93 லட்சம் கோடி) வரும் 2026-க்குள் அந்நாடு செலுத்த வேண்டும். ஆனால், நிகழாண்டில் செலுத்த வேண்டிய 700 கோடிடாலரை (ரூ.54,316 கோடி) இலங்கை அரசு நிறுத்தி வைத்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT