தலிபான்களின் புதிய உத்தரவால் தங்களது உரிமையை இழந்து நிற்கும் சக பெண் ஊழியர்களுக்காக ஆண் ஊழியர்கள் சமூக ஊடகங்களில் குரல்கொடுத்து வருகின்றனர்.
தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய நாள் முதலே பெண்களின் சுதந்திரத்தினை பறிக்கும் விதமாக பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் செய்தி நிறுவனங்களில் செய்தி வாசிப்பாளர்களாக பணிபுரியும் பெண்கள் செய்திகள் வாசிக்கும்போது தங்களது முகத்தினை மூடிக்கொள்ள வேண்டும் என்ற உத்தரவினை தலிபான்கள் பிறப்பித்திருந்தனர். மேலும் தலிபான் அரசு இதனை அனைத்து ஊடகங்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பியது.
இதையும் படிக்க | எனக்கு ஏன் இத்தனை குழந்தைகள்? கவனம் ஈர்த்த எலான் மஸ்கின் சமீபத்திய ட்விட்
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் டோலோ செய்தி நிறுவனத்தில் பணிபுரியும் ஆண் ஊழியர்கள் அவர்களுடன் பணிபுரியும் சக பெண் ஊழியர்களின் உரிமையை மீட்கும் பொருட்டு ஃப்ரீஹெர்ஃபேஸ் (Freeherface) என்ற ஹேஸ்டேக்கை சமூக ஊடகங்களில் பரப்பி தலிபான்களின் உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் ஒருபகுதியாக ஆண் ஊழியர்கள் தங்களது முகத்தினை முகக்கவசம் கொண்டு பெண்களைப் போலவே மூடிக் கொண்டு தங்களது எதிர்ப்பை அவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இது குறித்து ஐநா மனித உரிமைகள் அமைப்பின் சமூக செயற்பாட்டாளர் சாஹர் பெட்ரத் கூறியதாவது, “ஆண் பத்திரிக்கையாளர்கள் பெண்களுக்கு ஆதரவாக முகக்கவசம் அணிந்துள்ளது ஒரு மிகப் பெரிய செயல். இதுவரை பெண்களின் உரிமைகளுக்காக பெண்கள் மட்டுமே போராடி வந்த நிலையில் சக ஆண் ஊழியர்களின் இந்த போராட்டம் வரவேற்கத்தக்கது.
இதையும் படிக்க | ’போரால் நிலைமை மோசமடைந்து வருகிறது': ஸெலென்ஸ்கி வேதனை
ஆனால், அவர்கள் ஹிஜாப் அணிவார்களா? புர்கா அணிய வேண்டும் எனக் கூறினால் புர்கா அணிவார்களா? ஆப்கன் பெண்களின் உரிமைகளுக்காக அவர்களின் ஆதரவு எவ்வளவு தூரம் போகும்? உணர்ச்சி மற்றும் கோபத்தினை மட்டும் வைத்து என்ன செய்ய முடியும்? அந்த கோபம் நம்மை எங்கு எடுத்துச் செல்லப் போகிறது? இவையெல்லாம் மிக முக்கியமான கேள்விகள்.” எனத் தெரிவித்தார்.