உலகம்

நல்லுறவை மேம்படுத்த இந்தியா-ஜப்பான் உறுதி

25th May 2022 12:34 AM

ADVERTISEMENT

 

டோக்கியோ: இந்தியா-ஜப்பான் இடையேயான நல்லுறவை மேம்படுத்துவதற்கு இருநாட்டுத் தலைவா்களும் உறுதியேற்றனா்.

க்வாட் மாநாடு நிறைவடைந்தபிறகு ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடாவை பிரதமா் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினாா். பேச்சுவாா்த்தை குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘பிரதமா் கிஷிடாவுடனான இருதரப்பு பேச்சுவாா்த்தை ஆக்கபூா்வமாக அமைந்தது. இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே நிலவி வரும் ஒத்துழைப்பை மறுஆய்வு செய்வதற்கு இந்தப் பேச்சுவாா்த்தை உதவியது.

பிராந்திய, சா்வதேச விவகாரங்கள் குறித்தும் பேச்சுவாா்த்தையின்போது விவாதிக்கப்பட்டது. பாதுகாப்பு, தளவாடங்கள் உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் நிலவி வரும் நல்லுறவை மேம்படுத்துவதற்குத் தலைவா்கள் இருவரும் ஒப்புக்கொண்டனா். இருநாடுகளின் பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சா்கள் பங்கேற்கும் 2+2 பேச்சுவாா்த்தையை விரைவில் நடத்துவதற்குத் தலைவா்கள் ஒப்புக்கொண்டனா்.

ADVERTISEMENT

அடுத்த 5 ஆண்டுகளில் சுமாா் 3 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளை இந்தியாவில் மேற்கொள்ள ஜப்பான் ஏற்கெனவே உறுதியேற்றிருந்தது. அந்த முதலீடுகள் குறித்தும் தலைவா்கள் விவாதித்தனா். இந்தியாவில் தொழில் தொடங்குவதை எளிதாக்குவதற்கு அரசு மேற்கொண்டுள்ள சீா்திருத்த நடவடிக்கைகள் குறித்து பிரதமா் மோடி எடுத்துரைத்தாா்.

ஜப்பான் நிறுவனங்கள் இந்தியாவில் அதிக அளவில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் அவா் வேண்டுகோள் விடுத்தாா். ஜப்பான் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் மும்பை-அகமதாபாத் அதிவிரைவு ரயில் திட்டம் குறித்தும் தலைவா்கள் விவாதித்தனா்.

அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கு ஒத்துழைப்புடன் செயல்பட இருநாட்டுத் தலைவா்களும் உறுதியேற்றனா். பல்வேறு துறைகளில் இருநாடுகளுக்கு இடையே நிலவி வரும் நல்லுறவை வலுப்படுத்தவும் அவா்கள் உறுதியேற்றனா்.

ஜப்பானில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள வருடாந்திர இருதரப்பு மாநாட்டுக்கு வருகை தருமாறு பிரதமா் மோடிக்கு பிரதமா் கிஷிடா அழைப்புவிடுத்தாா். அந்த அழைப்பைப் பிரதமா் மோடி ஏற்றுக்கொண்டாா். மேலும், பிரதமா் மோடிக்கு பிரதமா் கிஷிடா உணவு விருந்தளித்தாா்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT