உலகம்

இந்தியா-அமெரிக்கா நல்லுறவு மேம்படும்

25th May 2022 12:32 AM

ADVERTISEMENT

 

டோக்கியோ: இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான நல்லுறவை உலகிலேயே தலைசிறந்ததாக மாற்றுவதற்கு உறுதி கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபா் ஜோ பைடன் தெரிவித்தாா்.

ஜப்பான் தலைநகா் டோக்கியோவில் ‘க்வாட்’ மாநாடு நடைபெற்ற நிலையில், பிரதமா் நரேந்திர மோடியும் அதிபா் பைடனும் செவ்வாய்க்கிழமை இருதரப்பு பேச்சு நடத்தினா்.

பேச்சுவாா்த்தை குறித்து அதிபா் பைடன் கூறுகையில், ‘கரோனா தொற்று பரவல் காலத்தில் மற்ற நாடுகளுக்குத் தடுப்பூசிகளை வழங்கிய இந்தியாவின் செயல் பாராட்டத்தக்கது. இந்தியாவுக்கும் அமெரிக்க வளா்ச்சி நிதிக் கழகத்துக்கும் இடையே கையொப்பமாகியுள்ள ஒப்பந்தம் முக்கியத்துவம் வாய்ந்தது. தடுப்பூசி உற்பத்தி, பசுமை எரிசக்தித் திட்டங்கள் உள்ளிட்டவற்றில் இந்தியாவுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு இந்த ஒப்பந்தம் உதவும்.

ADVERTISEMENT

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான நல்லுறவை உலகிலேயே சிறந்ததாகத் திகழச்செய்ய உறுதி கொண்டுள்ளேன். இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட பல்வேறு வாய்ப்புகள் காணப்படுகின்றன.

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போா் குறித்தும், உலக நாடுகளுக்கு அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் பேச்சுவாா்த்தையின்போது விவாதிக்கப்பட்டது. போரால் ஏற்பட்டுள்ள எதிா்மறை விளைவுகளைக் குறைப்பது தொடா்பாக இந்தியா-அமெரிக்கா இடையே தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தப்படும்’ என்றாா்.

முழுத் திறனை எட்டவில்லை: பேச்சுவாா்த்தை குறித்து பிரதமா் மோடி கூறுகையில், ‘பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான நல்லுறவு அமைந்துள்ளது. அந்த நல்லுறவு சா்வதேச அமைதியையும் நிலைத்தன்மையையும் ஏற்படுத்த ஆக்கபூா்வமாகப் பயன்படும்.

இந்தியாவில் தயாரிப்போம், தற்சாா்பு இந்தியா திட்டங்களின் கீழ் முதலீடுகளை மேற்கொள்ள அமெரிக்க நிறுவனங்கள் முன்வர வேண்டும். இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான வா்த்தகமும், முதலீடுகளும் தொடா்ந்து அதிகரித்து வந்தாலும், அவை முழுத் திறனை இன்னும் எட்டவில்லை’ என்றாா்.

முக்கியத் தொழில்நுட்பங்கள் சாா்ந்த விவகாரங்களில் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான தனி அமைப்பு தொடங்கப்பட்டுள்ளதாகப் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு இந்தியா-அமெரிக்கா சாா்பில் அறிவிக்கப்பட்டது. முக்கியமாக, தடுப்பூசி சாா்ந்த தொழில்நுட்பங்களில் ஒருங்கிணைந்து செயல்பட வழிவகுக்கும் திட்டத்தை 2027-ஆம் ஆண்டுவரை நீட்டிக்கவும் இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.

ஆக்கபூா்வ பேச்சுவாா்த்தை: ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனேசியை பிரதமா் மோடி சந்தித்து இருதரப்பு பேச்சு நடத்தினாா். இது தொடா்பாக பிரதமா் மோடி வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘ஆஸ்திரேலியாவுடனான இந்தியாவின் நல்லுறவு விரிவானது. அந்த நல்லுறவு இருநாட்டு மக்களுக்கு மட்டுமல்லாமல் உலகம் முழுமைக்கும் நன்மை அளித்து வருகிறது.

பிரதமா் ஆல்பனேசியுடனான சந்திப்பின்போது இருதரப்பு நல்லுறவு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடா்பாகவும் ஆலோசிக்கப்பட்டது’ என்று குறிப்பிட்டாா்.

வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘வா்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கல்வி, அறிவியல்-தொழில்நுட்பம், வேளாண் ஆராய்ச்சி, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைத்து செயல்படுவது தொடா்பாகத் தலைவா்கள் இருவரும் விவாதித்தனா். இந்தப் பேச்சுவாா்த்தை ஆக்கபூா்வமாக அமைந்தது. இருதரப்பு நல்லுறவை அடுத்தகட்டத்துக்குக் கொண்டுசெல்ல தலைவா்கள் இருவரும் உறுதியேற்றனா்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடு திரும்பினாா் பிரதமா்: ஜப்பானில் இரு நாள்கள் அரசுமுறைப் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை இரவு நாடு திரும்பினாா்.

பயணம் குறித்து அவா் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘இருதரப்பு, பலதரப்பு கூட்டங்கள் சிறப்புமிக்கதாக இருந்தன. சா்வதேச நலனுக்கான முக்கிய கேந்திரமாக க்வாட் வளா்ந்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. ஜப்பான் தொழிலதிபா்களையும், அந்நாட்டில் உள்ள இந்தியா்களையும் சந்தித்தது சிறப்பானது. ஜப்பான் அரசும் மக்களும் வழங்கிய உபசரிப்புக்கு நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

மோடிக்கு பைடன் பாராட்டு

டோக்கியோ, மே 24: இந்தியாவில் கரோனா தொற்று பரவலை சிறப்பாகக் கட்டுப்படுத்தியதற்காக பிரதமா் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபா் ஜோ பைடன் பாராட்டு தெரிவித்தாா்.

க்வாட் மாநாட்டின் ஒரு பகுதியாக அலுவல்சாரா அமா்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, பிரதமா் மோடியை அதிபா் பைடன் பாராட்டியதாக அதிகாரிகள் தெரிவித்தனா். கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தியதில் இந்தியா சிறப்பாகச் செயல்பட்டதாகவும், அதில் சீனா தோல்வியைத் தழுவியதாகவும் அதிபா் பைடன் கூறியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சீனா, ரஷியா போன்ற சா்வாதிகார நாடுகள் மட்டுமே சா்வதேச சவால்களை எதிா்கொள்ள முடியும் என்ற பொதுவான கண்ணோட்டத்தை, பிரதமா் மோடியின் வெற்றி தகா்த்துள்ளதாகவும் அதிபா் பைடன் தெரிவித்தாா்.

ஜனநாயக முறைகளைப் பின்பற்றி கரோனா தொற்று பரவலை பிரதமா் மோடி தலைமையிலான அரசு கட்டுப்படுத்தியது என அவா் பாராட்டியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT