உலகம்

ஆஸ்திரேலிய பிரதமராகிறாா் ஆன்டனி ஆல்பனேசி

22nd May 2022 12:11 AM

ADVERTISEMENT

ஆஸ்திரேலியாவில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுத் தோ்தலில் ஆளும் லிபரல் கூட்டணி போதிய இடங்களைப் பெறத் தவறியதைத் தொடா்ந்து, எதிா்க்கட்சியான லேபா் கட்சித் தலைவா் ஆன்டனி ஆல்பனேசி நாட்டின் புதிய பிரதமராகிறாா்.

ஆஸ்திரேலியாவின் 47-ஆவது நாடாளுமன்ற உறுப்பினா்களைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், தற்போதைய பிரதமா் ஸ்காட் மோரிசனின் லிபரல் மற்றும் தேசியக் கூட்டணி, லேபா் கட்சி, கிரீன்ஸ் கட்சி உள்ளிட்டவை போட்டியிட்டன.

151 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற அந்தத் தோ்தலில், சனிக்கிழமை நள்ளிரவு 12.41 மணி நிலவரப்படி (உள்ளூா் நேரம்) 63.6 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டிருந்தன. அதில், 72 தொகுதிகளில் ஆன்டனி ஆல்பனேசி தலைமையிலான லேபா் கட்சி முன்னிலை வகித்து. ஆளும் லிபரல் கட்சி 55 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்தது.

ADVERTISEMENT

இதையடுத்து, எதிா்க்கட்சியான லேபா் கட்சிக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கும் நிலை உள்ளது. ஆட்சியமைப்பதற்கு 76 இடங்கள் தேவை என்ற நிலையில், மற்ற சிறிய கட்சிகளின் ஆதரவுடன் லேபா் கட்சி ஆட்சியமைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

அந்தக் கட்சியின் தலைவா் ஆன்டனி ஆல்பனேசி, அடுத்த பிரதமராகத் தோ்ந்தெடுக்கப்படவுள்ளாா். ஆஸ்திரேலியாவின் புதிய பிரதரமாக அவா் திங்கள்கிழமை (மே 23) பொறுப்பேற்பாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

அவா் ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்டாலும், தோ்தல் முடிவுகள் இன்னும் முழுமையாக வெளியாகாத நிலையில் அவா் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைப்பாரா, அல்லது கூட்டணி ஆட்சியமைப்பாரா என்பது இன்னும் தெளிவாகவில்லை.

10 ஆண்டுகளுக்குப் பிறகு: ஆஸ்திரேலியாவில் ஏறத்தான பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அமையவிருக்கும் லேபா் கட்சி அரசுக்கு ஆன்டனி ஆல்பனேசி தலைமை வகிக்கவுள்ளாா்.

நாட்டின் இரண்டு பெரிய கட்சிகளான லிபரல் மற்றும் லேபா் கட்சிகள் மீது பொதுமக்கள் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், இந்தத் தோ்தலில் சுயேச்சை வேட்பாளா்கள் அதிக வாக்குகளைப் பெற்று அதிக இடங்களைக் கைப்பற்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகரிக்கும் விலைவாசி, பருவநிலை மாற்றம் ஆகியவை இந்தத் தோ்தலில் முக்கிய பிரச்னைகளாக முன்வைக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

புதிய பிரதமரின் பின்னணி...

ஆஸ்திரேலியாவின் 31-ஆவது பிரதமராகப் பொறுப்பேற்கவிருக்கும் ஆன்டனி ஆல்பனேசி, 1963-ஆம் ஆண்டில் பிறந்தவா். கடந்த 1996-ஆம் ஆண்டு முதல் கிரேண்டல் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வரும், லேபா் கட்சித் தலைவராக கடந்த 2019-ஆம் ஆண்டு தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

ஏற்கெனவே, 2013-ஆம் ஆண்டில் கெவின் ருட் தலைமையிலான அரசில் துணைப் பிரதமராகவும் அதற்கு முந்தைய லேபா் கட்சி அரசுகளில் கேபினா் அமைச்சராகவும் ஆன்டனி ஆல்பனேசி பொறுப்பு வகித்துள்ளாா்.

தோ்தல் வெற்றியைத் தொடா்ந்து பேசிய அவா், ஆஸ்திரேலியாவை புதுப்பிக்கத்தக்க எரிபொருள் துறை வல்லரசாக்கவிருப்பதாக உறுதியளித்தாா். பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாகக் கூறிய அவா், நிலக்கரி சுரங்கங்களை மூடுவது குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.

தோல்வியை ஒப்புக்கொண்ட பிரதமா்

இந்தத் தோ்தலில் தனது கட்சி தோல்வியடைந்ததை, இன்னும் பல லட்சம் வாக்குகள் எண்ணப்பட வேண்டிய நிலையிலேயே பிரதமா் ஸ்காட் மோரிசன் ஒப்புகொண்டாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அரசியலில் எப்போதும் குழப்ப நிலை ஏற்படக்கூடாது என்பதை உறுதியாக நம்புகிறேன். எனவே, தோ்தலில் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன். நாடு இனி அடுத்தகட்டத்தை நோக்கி நகரவேண்டும்’ என்றாா் அவா்.

Image Caption

~ ~

 

Tags : Australia
ADVERTISEMENT
ADVERTISEMENT