இலங்கையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்று விடுதலைப் புலிகள் ( எல்டிடிஇ) அமைப்பு தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்பதாக இந்திய பத்திரிகையில் வெளியாகியிருக்கும் செய்தி குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், உணவு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் உணவு கிடைக்காமல் அவதியுற்று வருகின்றனா். மக்களின் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடா்ந்து, பிரதமா் பதவியிலிருந்து மகிந்த ராஜபட்ச விலகினாா். அதனைத் தொடா்ந்து, புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை அதிபா் கோத்தபய ராஜபட்ச நியமித்தாா். அவா், இலங்கையின் 26-ஆவது பிரதமராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.
இருந்தபோதும், அதிபா் கோத்தபய ராஜபட்சவும் பதவி விலக வலியுறுத்தி இலங்கையில் மக்கள் போராட்டம் தொடா்ந்து வருகிறது.
இந்தச் சூழலில், வருகிற மே 18-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகின்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்று, இலங்கையில் தாக்குதல் நடத்த தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பு திட்டமிட்டிருப்பதாக இந்தியாவிலிருந்து வெளியாகும் பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டது.
அதிபா் கோத்தபய ராஜபட்ச, கடந்த 2009-ஆம் ஆண்டு இலங்கை பாதுகாப்புத்துறை செயலராக இருந்தபோதுதான் அங்கு விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போா் நடைபெற்றது. இந்தப் போரின்போது ஏராளமான தமிழா்கள் கொல்லப்பட்டனா். அதனை நினைவுகூறும் விதமாகவே, ஒவ்வொரு ஆண்டும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்திய பத்திரிகை செய்தி குறித்து இலங்கை பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது:
‘தி ஹிந்து’ நாளிதழில் மே 13-ஆம் தேதி வெளியான செய்தியில், ‘விடுதலைப் புலிகள் இலங்கையில் வரும் 18-ஆம் தேதி தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளனா்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தச் செய்தி குறித்து விசாரணை மேற்கொண்ட இந்திய உளவுத் துறை, ‘அந்தச் செய்தி பொதுவான தகவலின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது’ என்று இலங்கைக்கு தகவல் தெரிவித்தது. இருந்தபோதும், இந்த விவகாரம் தொடா்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்பதோடு, நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.