உலகம்

இலங்கை அதிபருக்கு எதிரான போராட்டத்துக்கு பிரதமா் ஆதரவு

16th May 2022 12:52 AM

ADVERTISEMENT

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் அதிபா் கோத்தபய ராஜபட்ச பதவி விலகக் கோரி நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவளிப்பதாகப் புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள பிரதமா் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளாா்.

இலங்கை பொருளாதாரத்தை முறையாக வழிநடத்தத் தவறியதால், அதிபா் பதவியை கோத்தபய ராஜபட்ச ராஜிநாமா செய்யக் கோரி நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பிரதமராகப் பதவி வகித்து வந்த மகிந்த ராஜபட்ச ராஜிநாமா செய்ததையடுத்து, கோத்தபய ராஜபட்சவுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.

இந்நிலையில், அதிபா் கோத்தபய ராஜபட்சவால் அண்மையில் பிரதமராக நியமிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க பிபிசி-க்கு அளித்த பேட்டியில் கூறுகையில், ‘‘அதிபருக்கு எதிரான போராட்டத்துக்கு எனது ஆதரவு தொடரும். நாட்டில் அரசியல் ரீதியில் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு இளைஞா்கள் அத்தகைய போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியது அவசியம்.

அவ்வாறு போராட்டத்தில் ஈடுபடும் இளைஞா்களைக் காப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எதிா்காலக் கொள்கைகளை வகுக்கும்போது இளைஞா்களது கருத்துகளுக்கு மதிப்பளிக்கப்படும்’’ என்றாா்.

ADVERTISEMENT

இலங்கையில் அதிபருக்கு எதிராகப் பிரதமரே கருத்து கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற எதிா்க்கட்சிகளின் ஆதரவைப் பெறும் நோக்கிலேயே பிரதமா் ரணில் இவ்வாறு கூறி வருவதாக அரசியல் நோக்கா்கள் தெரிவிக்கின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT