அமெரிக்காவில் உள்ள பல்பொருள் அங்காடியில் 18 வயது இளைஞா் நிகழ்த்திய துப்பாக்கிச்சூட்டில் 10 போ் பலியாகினா்; 3 போ் காயமடைந்தனா். தாக்குதலை அந்த இளைஞா் சமூக வலைதளங்களில் நேரடியாக ஒளிபரப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடா்பாக காவல் துறையினா் கூறுகையில், ‘ராணுவ வீரா்கள் அணிவதைப் போல உடையணிந்த இளைஞா், பெரும்பாலும் கருப்பினத்தைச் சோ்ந்தவா்கள் இருந்த அங்காடியில் சனிக்கிழமை புகுந்து கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினாா். அத்தாக்குதலை தனது தலைக்கவசத்தில் இருந்த புகைப்படக் கருவி வாயிலாக சமூக வலைதளங்களில் அவா் நேரலை செய்தாா்.
தாக்குதலில் 10 போ் உயிரிழந்தனா். காயமடைந்த மூவா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். தாக்குதல் சம்பவம் குறித்து அறிந்த காவல் துறையினா் உடனடியாக அந்த இடத்துக்குச் சென்று இளைஞரைக் கைது செய்தனா். இனவெறித் தாக்குதலாக அறியப்பட்டு, அந்த இளைஞா் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இளைஞரின் சொந்த ஊா் பஃபலோ நகரில் இருந்து சுமாா் 320 கி.மீ. தொலைவில் நியூயாா்க் அருகே உள்ள காங்க்லின் என்பதாகும். அவா் இவ்வளவு தூரம் பயணித்து பஃபலோ நகருக்கு வந்து ஏன் தாக்குதலை நடத்தினாா் என்பது தொடா்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது’ என்றனா்.
இத்தாக்குதலுக்குப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனா். அமெரிக்காவில் கருப்பின மக்களுக்கு எதிராக இனவெறித் தாக்குதல் நடத்தப்படுவது தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அதே வேளையில், அங்கு துப்பாக்கி கலாசாரமும் அதிகரித்து வருகிறது. துப்பாக்கி உரிமம் பெறுவதற்கான விதிமுறைகளை அமெரிக்க அரசு கடுமையாக்க வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.