உலகம்

சீனாவில் ஓடுபாதையில் தீப்பிடித்து எரிந்த பயணிகள் விமானம்: 40க்கும் மேற்பட்டோர் காயம்

12th May 2022 12:28 PM

ADVERTISEMENT

 

பெய்ஜிங்: தென்மேற்கு சீனாவின் சோங்கிங்கில் உள்ள விமான நிலையத்தில் வியாழக்கிழமை பயணிகள் விமானம் புறப்படும் போது ஓடுபாதையில் இருந்து விலகி தீப்பிடித்ததில் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

சோங்கிங் ஜியாங் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று காலை 8 மணியளவில் திபெத் ஏர்லைன்ஸ் விமானம் 113 பயணிகள் மற்றும் 9 ஊழியர்கள் உள்பட 122 பேருடன் புறப்பட்டது.

விமானம் புறப்பட்டு சிறிது தூரம் சென்றதும் ஓடுபாதையில் இருந்து விலகி திடீரென தீப்பற்றி எரிந்தது. 

ADVERTISEMENT

இந்த விபத்தை அறிந்த விமானிகள், விமானத்தை உடனடியாக நிறுத்தி பயணிகள் அனைவரையும் உடனடியாக வெளியேற்றியதால் பெரிய அளவிலான விபத்து தவிர்க்கப்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளியானது. 

இந்நிலையில், சோங்கிங் ஜியாங் சர்வதேச விமான நிலைய அறிக்கையை மேற்கோள் காட்டி, ஓடுபாதையில் இருந்து விலகி  விமானம் திடீரென தீப்பற்றி எரிந்ததில் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று ஸ்புட்னிக் தெரிவித்துள்ளது.

அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விமானத்தில் ஏற்பட்ட தீயை தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து அணைத்தனர்.

விமானம் ஓடுபாதையைவிட்டு விலகி புல்வெளிக்கு சென்றதால் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 


இதையும் படிக்க | 
புதுச்சேரியில் திடுக்கிடும் சம்பவம்: தலைமறைவானவர் கடத்திக் கொலை; 9 பேர் கைது

ADVERTISEMENT
ADVERTISEMENT