உலகம்

இலங்கையில் மீண்டும் தேர்தல் நடத்த முன்னாள் அதிபர் சீறிசேனா அழைப்பு

2nd May 2022 12:29 PM

ADVERTISEMENT

கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபரும், இலங்கை சுதந்திர கட்சியின் தலைவருமான மைத்ரிபால சீறிசேனா, ஞாயிற்றுக்கிழமை மே நாள் கூட்டத்தில் புதிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கை தனது சுதந்திர கட்சி ஏற்பாடு செய்திருந்த மே நாள் கூட்டத்தில் மைத்ரிபால சீறிசேனா பங்கேற்று பேசுகையில், நாடு பெரும் சோகத்தை எதிர்நோக்கியிருக்கும் இவ்வேளையில் அரசியல்வாதிகள் மக்களின் பக்கம் நிற்க வேண்டும், இதற்காகவே சர்வதேச தொழிலாளர் நாளன்று நானும் வீதியில் இறங்கியதாக தெரிவித்தார்.

“நாட்டின் பெரும் பணக்காரர்கள் முதல் விவசாயிகள், அரசு ஊழியர்கள் வரை ஆளும் அரசு வீட்டுக்குப் போகக் கோரி வீதியில் இறங்கி போராடி வரும் நிலையில், இந்த அரசு பதவி விலகாததால் நானும் வீதியில் இறங்கியுள்ளேன். புதிய அரசாங்கத்தை அமைக்க, புதிய தேர்தலுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன்.

மேலும் நாட்டில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள பல பிரச்னைகளால் மக்கள் அவலநிலையில் இருந்துவரும் நிலையில் என்னால் வீட்டில் இருக்க முடியவில்லை என்றார். 

ADVERTISEMENT

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் மூலம் விவசாயத்தில் ஒரு நாட்டை தன்னிறைவு அடையச் செய்ய வேண்டும் என்று கனவு கண்ட பொலன்னறுவை விவசாயிகள் இன்று விவசாயம் செய்ய முடியாமல் தவிக்கின்றனர். 

தற்போதைய தலைவர்கள் ஆட்சியில் தொடர்ந்து இருந்தால், மக்கள் வீட்டிலேயே இறக்கும் நிலை ஏற்படும் என எச்சரித்த சீறிசேனா, நாட்டில் ஏற்கனவே இரண்டு அல்லது மூன்று லட்சம் மக்கள் பட்டினியால் வாடுவதாகவும், உணவு கேட்டு நாடு முழுவதிலும் இருந்து தனக்கு அழைப்புகள் வருவதாக தெரிவித்த சீறிசேனா, இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி சிக்கலில் இருந்து மீள்வதற்கு மீண்டும் புதிய தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

பொருளாதார நிலைமை காரணமாக பிரதமர் மஹிந்த ராஜபட்ச மற்றும் அதிபர் கோத்தபய ராஜபட்ச ஆகியோர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க | கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் புதன்கிழமை கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்

ADVERTISEMENT
ADVERTISEMENT