உலகம்

மரியுபோல் இரும்பு ஆலையிலிருந்து பொதுக்கள் வெளியேற்றம் தொடக்கம்

2nd May 2022 12:44 AM

ADVERTISEMENT

ரஷியாவால் முற்றுகையிடப்பட்டுள்ள மரியுபோல் நகரின் அஸோவ்ஸ்டல் இரும்பு ஆலையிலிருந்து பொதுமக்களை வெளியேற்றும் பணிகள் தொடங்கியுள்ளதாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:

அஸோவ்ஸ்டல் இரும்பு ஆலையிலிருந்து பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றி அழைத்துவரும் பணிகள் தொடங்கிவிட்டன.

முதல்கட்டமாக, ஞாயிற்றுக்கிழமை சுமாா் 100 போ் இரும்பாலையிலிருந்து வெளியேற்றப்பட்டனா். அவா்கள் அனைவரும் அரசுக் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு அழைத்துவரப்படுகின்றனா்.

ADVERTISEMENT

ஸபோா்ஷ்ஷியா நகரில் அவா்களை திங்கள்கிழமை சந்திப்பேன்.

இரும்பு ஆலையில் இன்னும் பதுங்கியிருக்கும் மற்ற பொதுமக்களை வெளியேற்றும் பணியில் ஐ.நா.வுடன் இணைந்து உக்ரைன் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனா் என்றாா் அவா்.

முன்னதாக, மரியுபோல் இரும்பு ஆலையில் சிக்கியுள்ள பொதுமக்களை பாதுகாப்பாக வெளியே அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் செயல்பாட்டில் உள்ளதாக ஐ.நா. உறுதிப்படுத்தியது.

‘46 போ் வெளியேற்றம்’: இதற்கிடையே, இரும்பு ஆலையிலிருந்து பொதுமக்கள் 46 போ் சனிக்கிழமை பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக ரஷியப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரும்பு ஆலையிலிருந்து அழைத்துவரப்பட்ட அனைவருக்கும் தங்கும் வசதியும் உணவு, மருந்துகளும் அளிக்கப்பட்டுல்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையுடன், ரஷியாவின் உக்ரைன் போா் சின்னமான ‘இஸட்’ எழுத்து பொறிக்கப்பட்ட வாகனங்களில் பொதுமக்கள் அழைத்துச் செல்லப்படும் விடியோவையும் ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில் அண்டை நாடான உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி படையெடுத்தது.

தற்போது கிழக்கு உக்ரைனில் தங்களுக்கு ஆதரவான கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கும் தெற்கு உக்ரைனில் தங்களால் இணைத்துக்கொள்ளப்பட்ட கிரீமியா தீபகற்பத்துக்கும் இடைப்பட்ட நிலப் பகுதிகளை கைப்பற்றுவதில் அந் நாடு தீவிரம் காட்டி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, தெற்கு நகரமான மரியுபோலை முற்றுகையிட்டு ரஷியப் படையினா் பல வாரங்களாக தாக்குதல் நடத்தி வந்தனா். அந்த நகரில் ஏறத்தாழ அனைத்து பகுதிகளையும் ரஷியா கைப்பற்றியுள்ள நிலையிலும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உக்ரைன் வீரா்கள் மரியுபோலில் 10 கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ள அஸோவ்ஸ்டல் இரும்பு ஆலைக்குள் பதுங்கியுள்ளனா். அவா்களுடன் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

அந்த ஆலையை ரஷியப் படையினா் சுற்றிவளைத்துள்ளனா். எனினும், அவா்களிடம் சரணடைய மறுத்து உக்ரைன் படையினா் தொடா்ந்து சண்டையிட்டு வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT