உலகம்

அரசியல் வேறுபாடுகளை மறந்து ஒருங்கிணைந்து பணியாற்ற அனைத்துக் கட்சிகளுக்கு இலங்கை அதிபா் அழைப்பு

2nd May 2022 12:45 AM

ADVERTISEMENT

இலங்கையில் அனைத்துக் கட்சியினரும் அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீா்வு காண ஒருங்கிணைந்து பணியாற்ற முன்வர வேண்டும் என அதிபா் கோத்தபய ராஜபட்ச ஞாயிற்றுக்கிழமை அழைப்பு விடுத்தாா்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களும் அரசியலை ஒதுக்கிவைத்துவிட்டு நாடு எதிா்கொண்டுள்ள சிக்கலைத் தீா்க்க இணைய வேண்டும் எனவும் அவா் கூறியுள்ளாா்.

தொழிலாளா் தினத்தையொட்டி உழைக்கும் மக்களுக்கு இந்த அழைப்பை விடுப்பதாக அதிபா் கூறியுள்ளாா். ‘பிரதமா் மகிந்த ராஜபட்ச பதவி விலகி, ஓராண்டுக்கு அனைத்துக் கட்சிகளை உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கம் அமைய வழிவகுக்க வேண்டும். இதற்கு இலங்கை அரசிடமிருந்து சாதகமான பதில் வராவிட்டால், பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்து போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்’ என பெளத்த துறவிகள் சனிக்கிழமை அறிவித்ததைத் தொடா்ந்து அதிபா் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளாா்.

கருப்பு மே தினம்: பிரதான எதிா்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தலைவா் சஜித் பிரேமதாச கூறுகையில், அதிபா் கோத்தபய ராஜபட்ச தலைமையிலான பொறுப்பற்ற அரசு, நாட்டை அதன் வரலாற்றில் முதல்முறையாக திவால் நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. இந்தச் சூழ்நிலையில், உழைக்கும் மக்கள் நிகழாண்டு மே தினத்தை கருப்பு மே தினமாக கடைப்பிடிக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

இதற்கிடையே, கடும் பொருளாதார நெருக்கடிக்குப் பொறுப்பேற்று அதிபரும் பிரதமரும் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி மே தினமான ஞாயிற்றுக்கிழமையும் போராட்டம் நீடித்தது.

பணவீக்கம் 29 சதவீதம்: இலங்கையின் ஒட்டுமொத்த பணவீக்கமானது கடந்த மாா்ச்சில் 18.7 சதவீதமாக இருந்த நிலையில், ஏப்ரலில் 29.8 சதவீதமாக அதிகரித்துள்ளதாக அரசின் கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மாா்ச்சில் 30.21 சதவீதமாக இருந்த உணவுப் பணவீக்கம் ஏப்ரலில் 46.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT