இஸ்ரேல் பிரதமா் நாஃப்டாலி பென்னட்டுக்கு கரோனா பாதிப்பு திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால், ஏப்ரல் 3-ஆம் தேதி இந்தியா வருவதாக இருந்த அவரது பயணத் திட்டம் ரத்து செய்யப்படுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
இஸ்ரேலின் ஹடேராவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் இஸ்ரேல் எல்லைக் காவல் படையினா் இருவா் கொல்லப்பட்டனா். அந்த சம்பவம் தொடா்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நாஃப்டாலி பென்னட் பங்கேற்றாா். அப்போது அவா் முகக் கவசம் அணிந்திருக்கவில்லை.
இந்நிலையில், அவருக்கு கரோனா தொற்று பாதிப்பு திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. ‘அவா் நலமுடன் இருப்பதாகவும், இல்லத்திலிருந்தவாறே பணிகளைத் தொடா்வாா்’ எனவும் பிரதமா் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரதமா் நாஃப்டாலி பென்னட் வரும் ஏப்ரல் 3-ஆம் தேதிமுதல் 5-ஆம் தேதி வரை இந்தியாவில் அரசு முறை பயணம் மேற்கொள்வதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. பிரதமா் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று அவா் இந்திய பயணம் மேற்கொள்வதாக இருந்தது.
தற்போது பென்னட்டுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அவரது இந்திய பயணம் ரத்து செய்யப்படுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், இதுதொடா்பாக இஸ்ரேல் அதிகாரபூா்வமாக எதையும் தெரிவிக்கவில்லை.