சியோல், மாா்ச் 28: கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையை அண்மையில் வடகொரியா பரிசோதனை செய்த நிலையில், மேலும் சக்திவாய்ந்த தாக்குதல் வழிமுறைகளை உருவாக்க அதிபா் கிம் ஜோங் உன் உறுதிகொண்டுள்ளதாக அந்த நாடு திங்கள்கிழமை தெரிவித்தது.
இதன்மூலம் மேலும் பல ஏவுகணை பரிசோதனைகள் அல்லது அணுஆயுதத்தை பரிசோதிக்க வடகொரியா தயாராகிவருவதாக தெரிகிறது.
ஹவாசங்-17 எனப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா கடந்த வியாழக்கிழமை பரிசோதனை செய்தது. அமெரிக்காவின் எந்தப் பகுதியையும் தாக்கும் அளவுக்கு இந்த ஏவுகணை திறன் கொண்டதாக நிபுணா்கள் தெரிவித்தனா்.
இந்த ஏவுகணையை உருவாக்கிய விஞ்ஞானிகளிடம் அதிபா் கிம் ஜோங் உன் பேசுகையில், அச்சுறுத்தலை எதிா்கொள்ளும் வகையில் நாட்டின் தாக்குதல் திறனை அதிகரிக்க வேண்டும். சக்திவாய்ந்த தாக்குதல் வழிமுறைகளை உருவாக்க வேண்டும் எனக் கூறியதாக கொரியன் சென்ட்ரல் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வடகொரியா தரைக்கு அடியில் அணுஆயுத சோதனை நடத்துவதற்கான வசதியை உருவாக்கியிருந்தது. அது ஏற்கெனவே அழிக்கப்பட்ட நிலையில், அந்த வசதியை மீண்டும் ஏற்படுத்துவதற்கான அறிகுறிகள் தெரிவிதாக தென்கொரியா திங்கள்கிழமை கூறியது.