உலகம்

இலங்கை அதிபருடன் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு: தமிழ், சிங்களத்தில் ட்வீட்! 

28th Mar 2022 05:18 PM

ADVERTISEMENT

இலங்கையின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்நாட்டுக்குச் சென்றிருக்கும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், அதிபர் கோத்தபய ராஜபட்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபட்ச ஆகியோரை சந்தித்துப் பேசினார்.

இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது சுட்டுரைப் பக்கத்தில் புகைப்படத்துடன் தகவல்களை தமிழிலும் சிங்களத்திலும் பதிவு செய்துள்ளார்.

இலங்கை சென்றிருக்கும் ஜெய்சங்கர், இரு தரப்பு பேச்சுவார்த்தைகளில்  பங்கேற்றதுடன், பல்வேறு உடன்பாடுகளிலும் கையெழுத்திட்டுள்ளார்.

இலங்கை அதிபருடனான சந்திப்பு குறித்து ஜெய்சங்கர் கூறியிருப்பதாவது, நமது நெருக்கமான அயலுறவின் பல்வேறு பரிமாணங்கள் குறித்து மீளாய்வு செய்யப்பட்டது. இந்தியாவின் தொடர்ச்சியான புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பு குறித்தும் அவரிடம் உறுதியளிக்கப்பட்டது என்று கூறி புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

ADVERTISEMENT

 

இலங்கை பிரதமருடன் நடைபெற்ற சந்திப்பு குறித்து ஜெய்சங்கர் சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.

1. இந்தியாவால் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாணக் கலாசார நிலையம் மெய்நிகர் மார்க்கமூடாக திறந்து வைக்கப்பட்டது.

2. பௌத்த கலாசாரம் மற்றும் மரபுகளுக்கான ஆதரவு மீதான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட நிகழ்வில் பங்கேற்பு.

3. யாழ்ப்பாணத்தில் தற்போது நடைபெற்றுவரும் ஜெய்ப்பூர் செயற்கைக்கால் பொருத்தும் முகாம் மெய்நிகர் மார்க்கமூடாகப் பார்வையிடப்பட்டது என்று பதிவிட்டிருந்தார்.

அந்நாட்டின் நிதியமைச்சர் பசில் ரஜபட்சவையும் அவர் இன்று சந்தித்துப் பேசியுள்ளார்.

மார்ச் 30 ஆம் தேதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் ஜெய்சங்கர், பல்வேறு அமைப்பினருடன் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதுடன், செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெறும் வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப - பொருளாதார ஒத்துழைப்பு முனைப்புக் கூட்டத்திலும் பங்கேற்கிறார்.

இதற்கிடையே, கொழும்பின் புறநகரிலுள்ள லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்புநிலையத்திற்கும் சென்று ஜெய்சங்கர் பார்வையிட்டார். 

 

உணவுப் பொருள்களில் தொடங்கி, எரிபொருள், காகிதம் எல்லாவகையான பற்றாக்குறைகளாலும் மக்களின் வாழ்க்கை நிலைமை மிகவும் மோசமான நிலையில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் பயணம் அமைகிறது.

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்ட சிங்களப் பதிவு..
 

ADVERTISEMENT
ADVERTISEMENT