உலகம்

ஐக்கிய அரசு அமீரக அமைச்சர்களுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு

25th Mar 2022 03:22 PM

ADVERTISEMENT


அரசுமுறைப் பயணமாக துபை சென்றிருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பல்வேறு துறைகளில் தமிழகத்தில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் அமைச்சர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

மு.க.ஸ்டாலின் இன்று துபை பன்னாட்டு நிதி மையத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரத் துறை அமைச்சர் அப்துல்லா பின் டூக் அல் மர்ரியையும் ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிநாட்டு வர்த்தகத் துறை அமைச்சர் டாக்டர் தானி பின் அகமது அல் சியோதியையும் சந்தித்து, பல்வேறு துறைகளில் தமிழகத்தில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

இதையும் படிக்க.. பெண் செய்தியாளர் எழுதிய 3 உருக்கமான தற்கொலை கடிதங்கள்

இச்சந்திப்பின்போது, ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே உள்ள வர்த்தக உறவுகளை மேம்படுத்துதல், புத்தாக்கம் மற்றும் புத்தொழில்கள், தொழில் சூழலை மேம்படுத்துதல், விவசாயம், உணவு பதப்படுத்துதல், ஜவுளி மற்றும் ஆடைகள், நகை மற்றும் விலையுயர்ந்த கற்கள், மின்வாகனங்கள், மின்னணுவியல், மோட்டார் வாகனம் மற்றும் வாகன உதிரி பாகங்கள், பொறியியல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற துறைகளில் இணைந்து பணியாற்றி முதலீடுகள் மேற்கொள்வதன் மூலம் தமிழ்நாட்டிற்கும், ஐக்கிய அரபு நாடுகளுக்கும் இடையே உள்ள பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

ADVERTISEMENT


தமிழக முதல்வர், தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு நிலவும் சாதகமான சூழ்நிலையை எடுத்துக்கூறி, ஐக்கிய அரபு அமீரகத்தின் இரு அமைச்சர்களையும் தமிழகம் வருமாறு அழைப்பு விடுத்தார். மேலும், தமிழகத்தில் தொழில் தொடங்கிட, முதலீட்டாளர்கள் குழுவினையும் தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

இந்த நிகழ்வின்போது, தொழில் துறை அமைச்சர் தங்கம்தென்னரசு, தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச. கிருஷ்ணன், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பூஜா குல்கர்னி, தமிழக அரசின்  உயர் அலுவலர்கள், ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இந்தியத் தூதர் சஞ்சய் சுதிர், துணைத் தூதர் டாக்டர் அமன் பூரி மற்றும் இந்தியாவிற்கான ஐக்கிய அரபு அமீரக நாட்டின் தூதர்  அகமது அல் பன்னா ஆகியோர் உடனிருந்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT